மணல் காகிதம் விவகாரம் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரருக்கு ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் நாளை (நவ.21) காலை பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் திடலில் தொடங்கவுள்ளது.
சமபலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுவதால், இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆஷஸ் தொடரை காண ஆவலாகவுள்ளனர்.
போட்டிக்கான மோதல் துவங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 12-வது வீரர் என்று அழைக்கக்கூடிய ஆஸ்திரேலிய ஊடகங்கள், இங்கிலாந்து வீரர்களை சீண்டும் வேலையில் இறங்கியுள்ளன. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் என யாரையுமே ஆஸ்திரேலிய ஊடகங்கள் விட்டுவைக்கவில்லை.
அதன்தொடர்ச்சியாக தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் பத்திரிகையில், பெர்த்தில் உள்ள கிரிக்கெட் திடலின் ஆடுகளத்தை பச்சை ராட்சசன் என வர்ணித்துக் குறிப்பிட்டும், இங்கிலாந்து வீரர்கள் இங்கு கோல்ஃப் விளையாடவே வந்திருக்கின்றனர் என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இதனைக் கண்டு விரக்தியடைந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர், இங்கிலாந்து ஊடகங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இங்கிலாந்து ரசிகர் பொறுப்பு கேப்டன் ஸ்மித்தின் மணல் காகிதம் விவகாரத்தைக் குறிப்பிட்டு அவரை சீண்ட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தொடரில் பிரதான கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியதால், அவருக்குப் பதிலாக பொறுப்பு கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று காலை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திடம், மாண்டி பனேசரின் கருத்துகள் குறித்து ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அனைவரும் வியக்கும் வகையில் பதிலளித்த ஸ்மித், இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் அவமானப்படும் படியான கருத்துகளையும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்மித் பேசும்போது, “நாம் போட்டிக்கு சம்பந்தம் இல்லாத ஒரு தலைப்பை பற்றி பேசப்போகிறோம். உங்களில் யாராவது மாஸ்டர் மைண்ட் நிகழ்ச்சியில் மாண்டி பனேசரை பார்த்திருக்கிறீர்களா?” எனக் கேட்டதும் அந்த அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
அதனைத் தொடர்ந்து பேசிய ஸ்மித், “என்ன சொல்ல வருகிறேன் என்று சிலருக்குப் புரியும். நீங்கள் புரியவில்லை என்றாலும் புரிந்து கொள்ளுங்கள்.
ஏதென்ஸ் ஜெர்மனியில் இருக்கிறது என்றும், ஆலிவர் ட்விஸ்ட் ஆண்டின் ஒரு பருவம் என்றும் அமெரிக்கா ஒரு நகரம் என்றும் நம்பினால் அது நகைச்சுவையாக இருக்கும். அந்தக் கருத்துகள் என்னை எப்படி பெரிதாகப் பாதிக்கவில்லையோ அதேபோலத்தான் அந்தக் கருத்தையும் சொல்வேன்” என நக்கலாகக் கூறினார்.
முன்னதாக, பிபிசி செய்தி நிறுவனத்தில் ஜான் ஹாம்பிரிஸ் தொகுத்து வழங்கக்கூடிய பொது அறிவு வினா - விடை போட்டியான மாஸ்டர் மைண்ட் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம்.
இந்த நிகழ்ச்சியில் 2019 ஆம் ஆண்டு கலந்து கொண்ட மாண்டி பனேசரிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் தவறான விடைகளையே கொடுத்தார்.
இந்த நிகழ்வையே கேப்டன் ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டு பேசியிருந்தார். தற்போது அவரின் பேச்சுக்குப் பின்னால் தற்போது இந்த விடியோக்கள் இணையவாசிகள் மத்தியில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அதேபோன்று, 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுடனான போட்டியின்போது ஸ்மித் தலைமையிலான அணியில் பந்தினை சேதப்படுத்தியதற்காக ஸ்மித் கடுமையாக தண்டிக்கப்பட்டார். அதன் விளைவாக 2 ஆண்டுகள் விளையாட தடைவிதிக்கப்பட்டு கேப்டனாக பதவி வகிக்க ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.