சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று (அக்டோபர் 4) மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் டிம் செய்ஃபெர்ட் அதிகபட்சமாக 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், ஜேம்ஸ் நீஷம் 25 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் சீன் அபாட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சேவியர் பார்ட்லெட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
சர்வதேச டி20-ல் முதல் சதம்; தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 18 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிட்செல் மார்ஷ் ஒருபுறம் அதிரடியாக விளையாட, மறுபுறம் ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது.
டிராவிஸ் ஹெட் (8 ரன்கள்), மேத்யூ ஷார்ட் (7 ரன்கள்), டிம் டேவிட் (3 ரன்கள்), அலெக்ஸ் கேரி (1 ரன்), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (2 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தனி ஒருவராக ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் மிட்செல் மார்ஷ் சர்வதேச டி20 போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். சதம் விளாசியது மட்டுமின்றி அணிக்கு வெற்றியையும் பெற்றுத் தந்தார்.
அதிரடியாக விளையாடிய அவர் 52 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.