மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசும் வாய்ப்பினை தவறவிட்டது குறித்து சாய் சுதர்சன் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் இன்று (அக்டோபர் 10) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 318 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். அவர் 173 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் டெஸ்ட்டில் 7 ரன்களில் ஆட்டமிழந்த சாய் சுதர்சன், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்தார். அவர் 13 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார்.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பெரிய ஸ்கோரை எதிர்பார்த்ததாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இன்று நான் விளையாடிய விதம் கண்டிப்பாக எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், நம்முடைய மனதில் உள்ள குரங்கு எப்போதும் அதிகம் வேண்டும் என்பதை விரும்பும். அதனால், சதம் விளாச விரும்பினேன். மேலும், அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என நினைத்தேன். யஷஸ்வி ஜெய்ஸ்வால் நன்றாக விளையாடினார். அவர் விளையாடியதை மறுமுனையிலிருந்து பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது. அவர் அழகாக விளையாடி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது என்றார்.
அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, சாய் சுதர்சன் இந்திய அணியில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: என்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக் கூடாது: மோஷின் நக்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.