சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததை ஒருபோதும் மறக்க மாட்டோம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி, 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. இதன் மூலம், கடந்த 12 ஆண்டுகளில் இந்திய அணி முதல் முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.
இந்த நிலையில், சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததை ஒருபோதும் மறக்க மாட்டோம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததை ஒருபோதும் மறக்க மாட்டேன். அதனை ஒருபோதும் மறக்கவும் கூடாது. இந்திய அணியில் உள்ள வீரர்களிடத்திலும் இதனையேக் கூறியுள்ளேன். எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வது மிகவும் முக்கியம். ஆனால், சில நேரங்களில் கடந்த காலங்களில் நடந்ததை நினைவில் வைத்துக் கொள்வதும் மிகவும் முக்கியம். நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி விடுவோம் என அனைவரும் நினைத்தார்கள். அதனால், இந்த தோல்வியை நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நியூசிலாந்துக்கு எதிராக தொடரை முழுமையாக இழந்ததன் மூலம், இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற முடியாமல் போனது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி மிகவும் தடுமாறியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தங்களது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்திய அணி தற்போது அதன் சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டெம்பா பவுமா, கேசவ் மகாராஜ் அணியில் இல்லாதது பின்னடைவே, ஆனால்... மார்க்ரம் கூறுவதென்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.