தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
109 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் பாபர் அசாம் அதிகபட்சமாக 72 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அப்துல்லா சஃபீக் 41 ரன்களும், சௌத் ஷகீல் 38 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் செனுரான் முத்துசாமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சிமோன் ஹார்மெர் 4 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணியைக் காட்டிலும் 276 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் மூலம், தென்னாப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்துள்ளது.
ரியான் ரிக்கல்டான் 29 ரன்களுடனும், டோனி டி ஸார்ஸி 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 226 ரன்களும், பாகிஸ்தானின் வெற்றிக்கு இன்னும் 8 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.