வெள்ளைப் பந்து போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் விளாசியும், விராட் கோலி அரைசதம் விளாசியும் அணியின் வெற்றிக்கு உதவினர். விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், வெள்ளைப் பந்து போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இந்திய அணிக்காக 305 ஒருநாள் போட்டிகள் மற்றும் 125 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 18,438 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் என மொத்தமாக 18,436 ரன்கள் எடுத்திருந்ததே வெள்ளைப் பந்து போட்டிகளில் இதுவரையில் வீரர் ஒருவரால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார். இருப்பினும், சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளைப் பந்து போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு முன்னாள் வீரர் ஷிகர் தவான் தனது எக்ஸ் பதிவு மூலம் புகழாரம் சூட்டியுள்ளார்.
விராட் கோலி குறித்து ஷிகர் தவான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மற்றுமொரு மிகப் பெரிய சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளைப் பந்து போட்டிகளில் (ஒருநாள், டி20) அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உங்களது சாதனை மகத்தானது. உங்களது ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சிக்கு ஈடு இணையே இல்லை. தொடர்ந்து அனைவருக்கும் ஊக்கமளித்துக் கொண்டே இருங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபாரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.