சாதனை நாயகன் விராட் கோலி! 
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பையின் சாதனை நாயகன் விராட் கோலி!

டி20 உலகக் கோப்பையின் சாதனை நாயகனாக வலம்வந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியைப் பற்றி...

இரா. முத்துராஜா

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (பிப்.7) தொடங்கவுள்ள நிலையில், அதிரடி ஆட்டக்காரரும் இந்திய அணியின் நட்சத்திர வீரருமான விராட் கோலியின் கடந்த கால ஆட்டங்கள், சாதனைகள் குறித்து பார்க்கலாம்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எந்த வடிவிலான கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டாலும், இந்திய வீரர் விராட் கோலியின் பெயரை குறிப்பிடாமல் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா இல்லாமல் இந்திய அணி மிகப் பெரிய தொடரில் முதல் முறையாக விளையாடவிருக்கிறது. அதற்கு முன்னதாக, டி20 உலகக் கோப்பையில் முடிசூடா மன்னனாக விளங்கிய விராட் கோலியின் பங்களிப்புகள், அதிரடி ஆட்டங்கள், புள்ளி விவரங்கள், சிறந்த தருணங்களை இங்கு பார்க்கலாம்.

2007 ஆம் ஆண்டு முதல்முறையாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தது 2008-ல்தான்.

அதன் பின்னர் அவர் 2009 உலகக் கோப்பை அணியில் தேர்வாகாத நிலையில், 2010-ல் அணியில் வாய்ப்பு கிடைத்தும் அவருக்கு களத்தில் தனது திறமையை நிரூபிக்க அப்போது காலம் கனியவில்லை. 2012 ஆம் ஆண்டில் விராட் கோலிக்கான வாய்ப்பு கதவைத் தட்டியது. அதனை அவர் கச்சிதமாகப் பிடித்துக் கொண்டார் என்றே கூறலாம். 5 போட்டிகளில் விளையாடிய அவர் 185 ரன்களைக் குவித்தார்.

அதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டில் 6 போட்டிகளில் விளையாடிய கோலி, 319 ரன்களைக் குவித்திருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 72 ரன்களைக் குவித்திருந்த அவர், இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 77* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால், அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி கோப்பையையும் பறிகொடுத்தது. இருப்பினும், இந்த இரண்டு தொடர்களிலுமே அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றிருந்தார் அவர்.

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கைப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால் 2016 ஆம் ஆண்டுக்கு மட்டும் தனியாக இரண்டு புத்தகங்கள் போடலாம். அந்த அளவுக்கு ஒருநாள், டெஸ்ட், ஐபிஎல், டி20 உலகக் கோப்பை என தனது அதிரடி ஜாலத்தைக் காட்டினார் கோலி.

2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தனது அதிரடியை தீவிரப்படுத்தியிருந்தார் கோலி. அந்தத் தொடரில் 23, 55, 24, 82, 89* ரன்கள் (மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக) என அனைத்து இன்னிங்ஸ்களிலும் இரட்டை இலக்க ரன்களைக் குவித்து மொத்தமாக 273 ரன்கள் குவித்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதைத் தனதாக்கினார்.

2022-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்திருந்த 160 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதவித்துக் கொண்டிருந்தது. அப்போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து, இந்தியாவுக்கு 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டபோது ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 18.5, 19 ஓவரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் ,145+ கி.மீ. வேகத்தில் வீசிய பந்தை எளிதில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டு இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் சிறந்த ஆட்டங்களில் இந்த ஆட்டத்துக்கு எப்போதும் முதலிடம் கொடுக்கலாம்.

டி20 உலகக் கோப்பையில் இதுவரை 35 ஆட்டங்களில் 33 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி, 11 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். அதில் 58.72 ரன்கள் சராசரியுடன் 1292 ரன்கள் குவித்திருக்கிறார். அதிகபட்சமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2016 ஆம் ஆண்டில் 89* ரன்கள் விளாசியிருந்தார். இவர், 15 அரைசதங்களும் விளாசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையும் விராட் கோலி தன்னகத்தே வைத்திருக்கிறார். இதுவரை நான்கு பேர் மட்டுமே டி20 உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர் பேட்டர்களுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. அதிகளவிலான போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 120 ரன்களுக்கு குறைவான இலக்கையே நிர்ணயித்தன.

அமெரிக்க உலகக் கோப்பை விராட் கோலிக்கும் சறுக்கலான தொடக்கத்தையே கொடுத்தது. அயர்லாந்து (1 ரன்), பாகிஸ்தான் (4 ரன்கள்), அமெரிக்கா (முதல் பந்திலேயே அவுட் - கோல்டன் டக்), ஆப்கானிஸ்தான் (24 ரன்கள்), வங்கதேசம் (37), ஆஸ்திரேலியா (டக் அவுட்- 0), அரையிறுதியில் இங்கிலாந்து (9 ரன்கள்) என தொடர் முழுவதும் சுமாராகவே அமைந்தது.

இதனால், பல்வேறு தரப்பினரும் விராட் கோலி மீது விமர்சனங்களை அள்ளிவீசினர். ஆனால், இறுதிப் போட்டியில் பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 76 ரன்கள் விளாசி இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், டி20 ஃபார்மட்டில் தான் ஒரு ‘கிங்’ என தனது பாணியில் ஆட்டநாயகன் விருதுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து விடைபெற்றார் விராட் கோலி!

The 2026 edition of the T20 World Cup is just a few days away. One prominent name missing from the roster this time is none other than a man who has owned the tournament for over a decade. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய் கிழவி வாரா பாடல்!

20 நாள்களில் எடுக்கப்பட்ட 'ட்ரீம் கேர்ள்' காதலர் நாளில் ரீலீஸ்!

ஆரி நடிக்கும் புதிய படத்தின் டிரைலர்!

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவார் பொறுப்பேற்க வேண்டும்: புஜ்பால்

காலமானார் முன்னாள் எம்எல்ஏ கு.லிங்கமுத்து

SCROLL FOR NEXT