ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தொடக்கத்திலிருந்து ரோஹித் சர்மா அதிரடியான ஷாட்டுகளை விளையாடாததற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் விளாசியும், விராட் கோலி அரைசதம் விளாசியும் அணியின் வெற்றிக்கு உதவினர். ரோஹித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்களும், விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டபோது, ரோஹித் சர்மா ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே மிகவும் அதிரடியாக விளையாடக் கூடியவர். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவிக்கக் கூடியவர். ஆனால், கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக விளையாடுவதை தவிர்த்து, நிதானமாக விளையாடி அதிக ரன்கள் குவித்துள்ளார். கடைசி ஒருநாள் போட்டியில் நிதானமாக விளையாடி இறுதிவரை களத்தில் இருந்தார்.
இந்த நிலையில், அதிரடி ஆட்டத்திலிருந்து ரோஹித் சர்மாவின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியதாவது: ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கான காரணம் அவரது கேப்டன்சி என நினைக்கிறேன். அவர் தற்போது ஒரு பேட்டராக மட்டும் விளையாடுகிறார். அவர் மிகவும் எச்சரிக்கையுடன் ஷாட்டுகளை தேர்வு செய்து விளையாடுகிறார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி அதிரடியாக அணியை வழிநடத்த தற்போது அவர் கேப்டன் பொறுப்பில் இல்லை. அவர் அதிக பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.
எவ்வளவு ரன்கள் குவிக்கிறோம் என்பதைப் பொறுத்தே மக்கள் நம்மை மதிப்பிடுவார்கள் என்பது ரோஹித் சர்மாவிற்கு தெரியும். அதனால், அவர் அதிரடியாக 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்துவிட்டு ஆட்டமிழக்க விரும்பவில்லை. அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அதனால், அதிக ரிஸ்க்குகள் எடுக்காமல் ஆட்டத்தை முடிந்த அளவுக்கு ஆழமாக எடுத்துச் சென்றார். இதிலிருந்து ரோஹித் சர்மா அவரது விக்கெட்டினை எளிதில் விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.