வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது.
சட்டோகிராமில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அலிக் அதனாஸ் மற்றும் பிரண்டன் கிங் நிதானமான தொடக்கத்தைத் தந்தனர். அலிக் அதனாஸ் 27 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தும், பிரண்டன் கிங் 36 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து, கேப்டன் சாய் ஹோப் மற்றும் ரோவ்மன் பௌவல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஆட்டத்தின் கடைசி 3 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 51 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் ரோவ்மன் பௌவல் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
அதிரடியாக விளையாடிய சாய் ஹோப் 28 பந்துகளில் 46 ரன்களும் (ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள்), ரோவ்மன் பௌவல் 28 பந்துகளில் 44 ரன்கள் (ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) எடுத்தும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரிஷாத் ஹொசைன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.