உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் சதம் விளாசி ஆஸ்திரேலிய வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்டு சாதனை படைத்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் நவி மும்பையில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 49.5 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஃபோப் லிட்ச்ஃபீல்டு சதம் விளாசி அசத்தினார். அவர் 93 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இன்றையப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் சதம் விளாசிய இளம் வீராங்கனை என்ற சாதனையை ஃபோப் லிட்ச்ஃபீல்டு படைத்தார். அதேபோல, உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் சதம் விளாசிய மூன்றாவது ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன்பாக, அலிஸா ஹீலி மற்றும் கேரன் ரால்டன் நாக் அவுட் போட்டிகளில் சதம் விளாசியுள்ளனர்.
உலகக் கோப்பைத் தொடரில் சதம் விளாசிய இரண்டாவது இளம் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையையும் ஃபோப் லிட்ச்ஃபீல்டு படைத்தார். ஃபோப் லிட்ச்ஃபீல்டின் வயது 22 (22 வயது ,195 நாள்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.