பேட்டிங் பயிற்சியின்போது பந்து கழுத்தில் பட்டதில் இளம் ஆஸ்திரேலிய வீரர் உயிரிழந்துள்ளார்.
17 வயதாகும் பென் ஆஸ்டின் ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பில் விளையாடி வருகிறார். நேற்று முன் தினம் (அக்டோபர் 28) பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கழுத்து மற்றும் தலைப் பகுதியில் பந்து பலமாக பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பென் ஆஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப் இன்று (அக்டோபர் 30) உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் கிளப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பென் ஆஸ்டின் உயிரிழந்தது எங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கடினமான நேரத்தில் பென் ஆஸ்டினை இழந்து வாடும் அவரது குடும்பத்துடன் நாங்கள் துணை நிற்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் பயிற்சியின்போது பென் ஆஸ்டின் தலைக்கவசம் அணிந்திருந்தார். இருப்பினும், கழுத்துப் பகுதியில் பந்து படாமல் தடுக்கும் பட்டை அந்த தலைக்கவசத்தில் இல்லை. அதன் காரணமாக இந்த சோகம் நேர்ந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸுக்கு காதுப் பகுதிக்கு அருகே பந்து பலமாக பட்டதால், சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.