பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டியின் நடுவரை நீக்கக் கோரிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி மீண்டும் நிராகரித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் சுண்டப்படும்போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. இந்த விஷயம் மிகப் பெரிய பேசுபொருளானது.
இதனையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் எனவும், அவர் நீக்கப்பட வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட்டது. அதனை ஐசிசி நிராகரிக்கவே, இரண்டாவது முறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆண்டி பைகிராஃப்டை நீக்கக் கோரி முறையிடப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை மீண்டும் ஒருமுறை ஐசிசி நிராகரித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆசிய கோப்பையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதவுள்ளன. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததால், இன்று போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஐசிசி தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான இன்றையப் போட்டிக்கு ஆண்டி பைகிராஃப்ட் நடுவராக தொடர்வார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் விளையாட மறுத்தால், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முழுமையாக புள்ளிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ஹோட்டல் அறையிலேயே இருக்குமாறு அவர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.