ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசி இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 412 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். அதிரடியாக விளையாடிய அவர் 63 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
50 பந்துகளில் அதிவேகமாக சதம் விளாசியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இந்தியர் (ஆடவர் மற்றும் மகளிர் உள்பட) என்ற விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி 52 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். அதுவே இந்தியர் ஒருவரால் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதமாக இருந்து வந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இந்தியர்கள்
ஸ்மிருதி மந்தனா - 50 பந்துகளில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2025)
விராட் கோலி - 52 பந்துகளில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2013)
வீரேந்திர சேவாக் - 60 பந்துகளில், நியூசிலாந்துக்கு எதிராக (2009)
விராட் கோலி - 61 பந்துகளில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2013)
முகமது அசாரூதின் - 62 பந்துகளில், நியூசிலாந்துக்கு எதிராக (1988)
கே.எல்.ராகுல் - 62 பந்துகளில், நெதர்லாந்துக்கு எதிராக (2023)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.