ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்தியா தரப்பில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடியதை அவரது வருகை எனக் கூறமாட்டேன். பாகிஸ்தானுக்கு எதிரான அவரது அதிரடி ஆட்டம் வெறும் ஆரம்பம் மட்டுமே. அவர் இப்போதுதான் ஆரம்பித்துள்ளார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவர் கிரிக்கெட் உலகை கலக்க காத்திருக்கிறார். யுவராஜ் சிங்கைப் போன்று அபிஷேக் சர்மாவிடம் அதிக அளவிலான திறமைகள் இருக்கின்றன.
வெள்ளைப் பந்து போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக அபிஷேக் சர்மாவால் எளிதில் மாற முடியும். இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் சகாப்தத்தை அபிஷேக் சர்மா தொடர்வதாக நினைக்கிறேன். அபிஷேக் சர்மா மிகவும் அற்புதமான திறமைகள் நிறைந்த வீரர் என்றார்.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 173 ரன்களுடன் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.