தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிரணி ஆறுதல் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க மகளிரணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளிலில் வெற்றி பெற்று, தென்னாப்பிரிக்க அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லாகூரில் இன்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது.
பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 25.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் லாரா வோல்வர்ட் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நடின் டி கிளர்க் மற்றும் மஸபட்டா கிளாஸ் தலா 13 ரன்களும், கரபோ மேசோ 12 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் நஸ்ரா சாந்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சையதா ஷா 2 விக்கெட்டுகளையும், ஒமையா சொஹாலி மற்றும் டையானா பைக் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 31 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சித்ரா அமின் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். முனீபா அலி 44 ரன்களும், நடாலியா பெர்வைஸ் 14 ரன்களும் எடுத்தனர்.
தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.