சூப்பர் 4 சுற்றில் அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதத்தால், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 4 அணிகள் மோதும் ஆசியக் கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.
இந்தச் சுற்றில் தலா ஒரு வெற்றியுடன் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை சர்வதேச கிரிக்கெட் திடலில் மோதின.
டாஸ் வென்ற வங்கதேச அணியின் பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினார். அபிஷேக் நிதானமாக துவங்கினாலும், கில் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
இருப்பினும், 19 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து வெளியேற திடீரென மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் துபே 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஒருபக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியதுபோல் ஆடிய அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிராக காட்டிய அதிரடியை இங்கும் தொடர்ந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 37 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார்.
அடுத்தவந்த கேப்டன் சூர்யா, திலக் வர்மா இருவரும் தலா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய ஹார்திக் பாண்டியா சில பந்துகளை பவுண்டரிக்கு ஓடவிட்டார். அவர் 29 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து வீழ்ந்தார்.
முடிவில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. வங்கதேச அணித்தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.