ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பேசியுள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுவதால் இந்த இரண்டு அணிகளின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி, இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று, உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள முதல் போட்டி அந்த அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என நினைக்கிறேன். ஏனெனில், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், சொந்த மண்ணில் விளையாடுகிறோம் என்ற இந்திய அணியின் அழுத்தத்தை அது போக்கிவிடும். இலங்கைக்கு எதிராக சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தால், இந்திய அணியின் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரித்துவிடும். சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடர்கள் நடைபெற்றால், அணிகளின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக இருக்கும் என்றார்.
இதற்கு முன்பாக, கடந்த 1978, 1997 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. மீண்டும் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடர் என்பதால், முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்றாக வேண்டும் என்ற கனவுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
31 வயதாகும் மெக் லேனிங் கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் 8000-க்கும் அதிகமான ரன்களை அவர் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.