டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு எதிரணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நாளையுடன் நிறைவடைகின்றன. நாளை மறுநாள் (பிப்ரவரி 21) முதல் சூப்பர் 8 சுற்று தொடங்குகிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. நாளை மறுநாள் (பிப்ரவரி 21) நடைபெறும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு இருக்கும் இரண்டு பிரச்னைகள்!
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப் ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், இந்த தொடரின் மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டு பிரச்னைகளை சந்தித்தது. சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்ற பிறகும் இந்த பிரச்னைகள் தொடர்கின்றன.
இந்திய அணியின் டாப் ஆர்டர் எளிதில் கணிக்கும்படி இருப்பதால், எதிரணியினர் எளிதில் வியூகங்கள் வகுத்து அவர்களின் விக்கெட்டினைக் கைப்பற்றுகின்றனர். இந்திய அணியின் பேட்டர்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
டி20 உலகக் கோப்பையை வெல்ல கடும் போட்டியாளரான இந்தியா இன்னும் மிகச் சரியான ஆட்டத்தை (Perfect game) வெளிப்படுத்தவில்லை என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணியின் டாப் ஆர்டர் எளிதில் கணிக்கும்படி இருப்பதாகவும், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பேட்டர்கள் ரன்கள் குவிக்கத் தடுமாறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்து இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்திய அணியின் டாப் ஆர்டரில் மூன்று இடதுகை வீரர்கள் (அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா) இருப்பதால், எதிரணி அவர்களுக்கு எதிராக எளிதில் வியூகங்களை வகுத்து சவாலளிக்கும் விதமாக பந்துவீசுகின்றனர். பவர்பிளே ஓவர்களில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
அமெரிக்க அணியைத் தவிர்த்து மற்ற மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களின் விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீசியதுடன் விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
நெதர்லாந்துக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆட்டர் பேட்டர்களான அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷனின் விக்கெட்டுகளை ஆஃப் ஸ்பின்னர் ஆர்யன் தத் வீழ்த்தினார். பவர் பிளேவில் அவர் மூன்று ஓவர்கள் வீசினார்.
நமீபியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டங்களிலும் இந்திய அணியின் பேட்டர்கள் சுழற்பந்துவீச்சில் தடுமாறினர். நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் இந்திய அணியின் பேட்டர்களை தனது சிறப்பான சுழற்பந்துவீச்சினால் திணறடித்தார். பாகிஸ்தான் அணியின் சைம் ஆயுப், கேப்டன் சல்மான் அலி அகா தங்களது அபார பந்துவீச்சால் இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தனர்.
சூப்பர் 8 சுற்றில் டாப் ஆர்டரில் மாற்றம் இருக்குமா?
இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் அதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா இன்னும் ரன் கணக்கையே தொடங்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா? அல்லது இடதுகை, வலதுகை காம்பினேஷனுக்காக சஞ்சு சாம்சன் அவருக்குப் பதிலாக சேர்க்கப்படுவாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுவரை விளையாடிய லீக் போட்டிகளைக் காட்டிலும் இனி வரும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளே மிகவும் கடினமானவையாக இருக்கும். இந்திய அணிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் பேட்டர்கள் இருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டிக்குப் பிறகு இந்திய அணிக்கு எந்தெந்த இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.