முகப்பு
கிரிக்கெட்

சுழற்பந்துவீச்சை வைத்து அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்த திட்டமிடுகிறதா தென்னாப்பிரிக்கா?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டினை சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து வீழ்த்த தென்னாப்பிரிக்க அணி திட்டமிடுகிறதா?

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 11:42 AM
அபிஷேக் சர்மா - படம் | AP
பகிர்:

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்த தென்னப்பிரிக்க அணி நிர்வாகம் சுழற்பந்துவீச்சை பயன்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் ஸ்டேஜ் லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இலங்கையில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் விளையாடுகின்றன.

நாளை முதல் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் தொடங்குகின்றன. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நாளை (பிப்ரவரி 21) பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. நாளை மறுநாள் (பிப்ரவரி 22) அகமதாபாதில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

Advertisement

அபிஷேக் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்த திட்டமா?

இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்படுகிறது. இருப்பினும், அபிஷேக் சர்மாவின் சமீபத்திய ஃபார்ம் இந்திய அணிக்கு சற்று கவலையளிக்கும் விதமாக உள்ளது.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, இதுவரை ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் அலி கான் பந்துவீச்சில் கோல்டன் டக் அவுட்டான அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சல்மான் அலி அகா பந்துவீச்சிலும், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆர்யன் தத் பந்துவீச்சிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதனால், கடைசி இரண்டு போட்டிகளாக ஆஃப் ஸ்பின்னர்கள் பந்துவீச்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி சுழற்பந்துவீச்சை பயன்படுத்த திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

அபிஷேக் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்துவதற்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பவர் பிளேவில் ஓவர்கள் வீச வாய்ப்பிருக்கிறது. இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஜார்ஜ் லிண்டேவும் பயன்படுத்தப்படலாம். ஆட்டத்தின் முதல் ஓவரை மார்க்ரம் அல்லது ஜார்ஜ் லிண்டேவை வைத்து தொடங்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணியை திணறவைத்த அபிஷேக் சர்மாவுக்கு நடப்பு உலகக் கோப்பைத் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அபிஷேக் சர்மா.

அகமதாபாதில் நாளை மறுநாள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பி அதிரடியில் மிரட்டுவாரா? அல்லது சுழற்பந்துவீச்சுக்கு மீண்டுமொருமுறை விக்கெட்டினை பறிகொடுத்து பெவிலியன் திரும்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

summary

Is the South African team planning to use spinners to take down the wicket of Indian opener Abhishek Sharma?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments