2026 ஆம் ஆண்டுக்கான டி20 கோப்பைத் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தில்லி, சென்னை, மும்பை உள்பட 5 இடங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
பிப்ரவரி 7 ஆம் தேதி கொழும்புவில் தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி - நெதர்லாந்தை எதிர்கொள்ளவிருக்கிறது. போட்டி தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியின் கிரிக்கெட் வாரியமும் தங்களது அணி விவரத்தை அறிவித்து வருகின்றன. இந்தியா, ஓமன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அணிகளை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ரியான் ரிக்கல்டான் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் திரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கேப்டனாக மார்க்ராம் தொடருகிறார். டெவால்டு பிரீவிஸ், டோனி டி ஜோர்ஜி, டெனோவன் ஃபெரைரா, ஜார்ஜ் லிண்டே, க்வெனா மபாகா, ஜேசன் ஸ்மித் உள்ளிட்டோரும் முதல்முறையாக உலகக் கோப்பைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடாத முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் ஆட்ரிச் நார்க்கியா இருவரும் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் விக்கெட் கீப்பர் குயிண்டன் டிக்காக், இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதேவேளையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடிய ரீஸா ஹெண்டிரிக்ஸ், ஓட்டனில் பார்ட்மேன் இருவரும் அணியில் சேர்க்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்க அணிக்காக ஒரேயொரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஜேசன் ஸ்மித் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். 19 வயதான ஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடும் க்வெனா மகாபாவுக்கு முதல்முறை உலகக் கோப்பைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும் தங்கள் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, கனடா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
தென்னாப்பிரிக்க அணி விவரம்
எய்டன் மார்க்ராம் (கேப்டன்), குயிண்டன் டிக்காக், டோனி டி ஜோர்ஜி, டெவால்டு பிரெவிஸ், டேவிட் மில்லர், டெனோவன் ஃபெரைரா, மார்கோ யான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, க்வெனா மபாகா, லுங்கி இங்கிடி, ஜேசன் ஸ்மித், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ஆண்ட்ரிச் நார்க்கியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.