நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜனவரி 11 ஆம் தேதி வதோதராவில் நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட அணியை ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்துகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், உடல் தகுதியைப் பொருத்தே ஷ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அண்மையில் விளையாடியது. இந்த தொடரின் கடைசி போட்டியின்போது, பீல்டிங்கில் பந்தை பிடிக்க முயற்சித்தபோது ஷ்ரேயாஸ் ஐயருக்கு வயிற்றுப் பகுதியில் பலமாக அடிபட்டது. அதில், அவருக்கு மண்ணீரலில் உள் ரத்தக் கசிவு ஏற்பட்டது.
தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடினார். வருகிற ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியிலும் அவர் விளையாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தப் போட்டியில் விளையாடிய பிறகு அவருக்கு முழு உடல்தகுதி இருப்பதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுவிட்டால், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவார். விளையாடுவதில் அசௌகரியம் இருந்தால், அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இந்திய அணி வருகிற ஜனவரி 11 முதல் ஜனவரி 31 வரையிலான இடைவெளியில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.