மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் யுபி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் நேற்று (ஜனவரி 9) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் நவி மும்பையில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் விளையாடியது.
ஆஷ்லே கார்டனர் அரைசதம்
முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் கேப்டன் ஆஷ்லே கார்டனர் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 41 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அனுஷ்கா சர்மா 44 ரன்களும், சோஃபி டிவைன் 38 ரன்களும் எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ஜியார்ஜியா வார்ஹம் 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
யுபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் இரண்டு விக்கெட்டுகளையும், ஷிக்னா பாண்டே மற்றும் டீண்ட்ரா டாட்டின் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
வெற்றியுடன் தொடங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ்
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 10 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
யுபி வாரியர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ஃபோப் லிட்ச்ஃபீல்டு அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 40 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் மெக் லேனிங் 30 ரன்களும், ஆஷா சோபனா 27 ரன்களும் எடுத்தனர்.
குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் ரேணுகா சிங், சோஃபி டிவைன் மற்றும் ஜியார்ஜியா வார்ஹம் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கேப்டன் ஆஷ்லே கார்டனர் மற்றும் ராஜேஸ்வரி காயக்வாட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜியார்ஜியா வார்ஹமுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசனை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.