வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பைத் தொடரை புறக்கணிப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தில்லி, சென்னை உள்பட 5 இடங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல்போக்கு காரணமாக, தங்களுக்கான போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், வங்கதேசத்தின் கோரிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முற்றிலுமாக மறுத்துவிட்டது.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக பாகிஸ்தான், வங்கதேச ஆகிய இரண்டு அணிகளுமே டி20 உலகக் கோப்பைத் தொடரைப் புறக்கணிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த அதிகாரபூர்வமற்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ள பாகிஸ்தான், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வங்கதேசம் தொடரில் இருந்து விலக முடிவு செய்தாலும், நாங்கள் போட்டியைப் புறக்கணிக்க மாட்டோம் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நெருங்கிய வட்டாரங்கள் கூறிய தகவல்களின்படி, “பாகிஸ்தான் போட்டியிலிருந்து விலகுவதற்கு எந்த காரணமும் இல்லை.
பாகிஸ்தான் அணி ஏற்கனவே தங்களுக்கான போட்டிகளை இலங்கையில் விளையாடவிருக்கிறது. மக்கள் பிரச்சினையை தூண்டுவதற்காக இதுபோன்ற விஷயங்களை பரப்புகிறார்கள்” என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.