ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா தாக்கத்தை ஏற்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி நாக்பூரில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தியது.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 238 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த அபிஷேக் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது: டி20 போட்டிகளில் உலகின் நம்பர் 1 பேட்டர் அபிஷேக் சர்மா என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் அதிரடியில் மிரட்டினார். அவர் ஆட்டத்தினை நியூசிலாந்திடமிருந்து இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார்.
அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவரது தன்னம்பிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவதால் ரசிகர்களின் ஆதரவு அபிஷேக் சர்மாவுக்கு அதிகமாக இருக்கும். உலகக் கோப்பைத் தொடரில் அவர் அதிரடியாக விளையாடினால், இந்திய அணி மற்றுமொரு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பிருக்கிறது என்றார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.