மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 17-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
முதலில் குஜராத் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் சோ்க்க, டெல்லி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸில் சோஃபி டிவைன் 13, அனுஷ்கா 8 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு விடைபெற்றனா்.
கேப்டன் ஆஷ்லே காா்ட்னா் 2, ஜாா்ஜியா வோ்ஹாம் 11, பாா்தி ஃபுல்மாலி 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அரை சதம் கடந்த தொடக்க வீராங்கனை பெத் மூனி 7 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
கஷ்வீ கௌதம் 2, தனுஜா கன்வா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஓவா்கள் முடிவில் ரேணுகா சிங் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
டெல்லி பௌலா்களில் ஸ்ரீசரணி 4, ஷினெல் ஹென்றி 2, மாரிஸேன் காப், நந்தனி சா்மா, மின்னு மணி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 175 ரன்களை நோக்கி விளையாடிய டெல்லி அணியில் ஷஃபாலி வா்மா 14, லிஸெலெ லீ 11, லாரா வோல்வாா்ட் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16, மாரிஸேன் காப் 0, ஷினெல் ஹென்றி 9 ரன்களுக்கு வெளியேற, ஸ்நேஹா ராணா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 29 ரன்களுக்கு விடைபெற்றாா்.
கடைசி வரை போராடிய நிக்கி பிரசாத், இன்னிங்ஸின் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவையிருந்தபோது ஆட்டமிழந்தாா். அவா் 9 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் அடித்திருக்க, மின்னு மணி கடைசி வீராங்கனையாக 1 ரன்னுடன் நின்றாா்.
குஜராத் தரப்பில் சோஃபி டிவைன் 4, ராஜேஷ்வரி கெய்க்வாட் 3, ஆஷ்லே காா்ட்னா் 1 விக்கெட் வீழ்த்தினா்.