முகப்பு
ஐபிஎல்

ரிஷப் பந்த் உதவியின்றி ஐபிஎல் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ள தில்லி அணி!

2018 ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த் வானவேடிக்கை நடத்தி 14 ஆட்டங்களில் 684 ரன்கள் எடுத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தில்லி கேபிடல்ஸ் அணியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

2018, 2019 ஆகிய வருடங்களில் அந்த அணி ரிஷப் பந்தின் பேட்டிங்கை மிகவும் நம்பியிருந்தது.

2018 ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த் வானவேடிக்கை நடத்தி 14 ஆட்டங்களில் 684 ரன்கள் எடுத்தார். 1 சதம், 5 அரை சதங்கள், 37 சிக்ஸர்கள் என மறக்க முடியாத ஒரு போட்டி அவருக்கு அமைந்தது. அதனால் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பையும் அடைந்தார். 

2019-ல் மூன்று அரை சதங்களுடன் 488 ரன்கள் எடுத்தார். 27 சிக்ஸர்கள். இதனால் தில்லி அணிக்குப் பெரிய பலமாக அமைந்தார். எதிரணிகள் ரிஷப் பந்தை வீழ்த்த திட்டமிட்டன. 

2018-ல் ரிஷப் பந்த் அமர்க்களமாக விளையாடியும் 5 ஆட்டங்களில் மட்டுமே வென்ற தில்லி அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது. கடந்த முறை மூன்றாம் இடம் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது.

இந்த வருடம் ரிஷப் பந்த் ஏமாற்றி விட்டார். 13 ஆட்டங்களில் 287 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு அரை சதம் கூட இல்லை. ஏழு சிக்ஸர்கள் தான். 

இதனால் தில்லி அணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுதான் ஆச்சர்யமானது. 

புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்ததோடு இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது தில்லி அணி.

ரிஷப் பந்த் பலனளிக்காவிட்டாலும் இதர வீரர்கள் பேட்டிங்கில் தில்லி அணியைக் காப்பாற்றி விட்டார்கள். 

ஷிகர் தவன் 2 சதங்கள், 4 அரை சதங்களுடன் 603 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 2 அரை சதங்களுடன் 454 ரன்களும் ஸ்டாய்னிஸ் 3 அரை சதங்களுடன் 353 ரன்களும் எடுத்து தில்லி அணியின் முன்னேற்றத்துக்கு உதவியுள்ளார்கள். பிரித்வி ஷா 2 அரை சதங்கள், ரஹானே ஒரு அரை சதம் என இதர பேட்ஸ்மேன்களும் அவ்வபோது அணிக்குப் பங்களித்துள்ளார்கள்.

ரிஷப் பந்த் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தில்லி அணியை யாராலும் நெருங்க முடியுமா?

முழு கட்டுரையைப் படிக்க →