ஐபிஎல்: பல தடைகளைத் தாண்டி சாதித்துள்ள சன்ரைசர்ஸ் அணி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கதை இதர அணிகளுக்கான பாடம்...
ஐபிஎல் 2020 போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான ஆட்டம் வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கதை இதர அணிகளுக்கான பாடம்.
லீக் சுற்றில் முதல் 9 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று போட்டியிலிருந்து வெளியேறும் நிலைமையில் இருந்தது சன்ரைசர்ஸ் அணி. ஆனால் கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் வென்று விஸ்வரூபம் எடுத்தது. பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
நேற்றைய பிளேஆஃப் ஆட்டத்தில் தில்லி அணியை வென்றிருந்தால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும். கடைசி வரை போராடி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சோ்த்தது. ரபாடா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தில்லி வீரா் ஸ்டாய்னிஸ் ஆட்ட நாயகன் ஆனாா்.
மற்ற அணிகளாக இருந்திருந்தால் பிளேஆஃப் வரை கூட வந்திருக்காது. ஆனால் எந்தவொரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு சாதித்துள்ளது ஹைதராபாத் அணி.
அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் காயம் காரணமாகப் போட்டியிலிருந்து வெளியேறினார். இதுவே பெரிய பின்னடைவு. நான்கு ஆட்டங்களில் மட்டுமே அவர் விளையாடினார். ஆனாலும் கடைசிவரை மிகச்சிறந்த பந்துவீச்சு அணியாகவே இருந்தது ஹைதராபாத். நடராஜன், சந்தீப் சர்மா, ஹோல்டர் வேகப்பந்து வீச்சில் அசத்தினார்கள்.
ஆல்ரவுண்டராக அணிக்கு உதவுவார் என நம்பிய மிட்செல் மார்ஷும் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேற நேர்ந்தது. ஓர் ஆட்டம் மட்டுமே அவர் விளையாடினார். மார்ஷுக்குப் பதிலாக அணிக்குத் தேர்வான ஹோல்டர் அற்புதமாகப் பங்களித்தார்.
வார்னருக்கு அடுத்ததாக அணியை வழிநடத்தும் கேன் வில்லியம்சனால் காயம் காரணமாக நான்கு ஆட்டங்களில் விளையாட முடியாமல் போனது. ஆனாலும் நிலைமையைச் சமாளித்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய விக்கெட் கீப்பர் சஹா, பேட்டிங்கில் அசத்தினார். கடைசி இரு ஆட்டங்களில் சஹாவாலும் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது.
அடிக்கடி காயத்தால் அவதிப்படும் விஜய் சங்கராலும் இந்தமுறை ஏழு ஆட்டங்களில் மட்டுமே விளையாட முடிந்தது. இதனால் ஒரு நல்ல ஆல்ரவுண்டரின் பங்களிப்பு இல்லாமல் போனது.
எத்தனை எத்தனை தடைகள். இதுபோன்ற தடைகளை எதிர்கொண்ட சிஎஸ்கேவால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியாமல் போனது. ஆனால் லீக் சுற்றின் கடைசிப் பகுதியில் அட்டகாசமாக விளையாடியது ஹைதராபாத் அணி. இதனால் லீக் சுற்றின் முடிவில் பல அணிகளைப் பின்னுக்குத் தள்ளி 3-ம் இடம் பிடித்தது.
பிளேஆஃப்பில் ஆர்சிபியைத் தோற்கடித்தது. ஆனால் நேற்று, தில்லி அணியை வீழ்த்த முடியாமல் போனது.
அடுத்த வருடம் இத்தனை தடைகள் இருக்க வாய்ப்பில்லை. சன்ரைசர்ஸ் அணி இன்னொரு முறை சாதிக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.