ஐபிஎல்

நம்ம சென்னை டீமுக்கு என்னதான் ஆச்சு..?

13-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விகளைத் தவிர்க்க நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. 

சுவாமிநாதன்


முதல் ஆட்டத்தில் ஒப்பீட்டளவில் எளிதான அணியான சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்வது அணிக்கு ஊக்கம் அளிக்குமா?

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விதான் இது.

முதல் ஆட்டத்தின் முடிவின் மூலம் இந்த கோணத்தை தவிடுபொடியாக்கிய சென்னை அணி, அடுத்த இரண்டு ஆட்டங்களில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. காரணம், சென்னை அணியில் மூன்று நான்கு பிரச்னைகள் உள்ளன.

என்னதான் பிரச்னை?

பேட்டிங்:

  • ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே பேசப்பட்ட பிரச்னைதான். டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை. இந்த சீசனில் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவர்களை எதிர்கொள்ளவும், அவர்களுக்கு நெருக்கடியளிக்கவும் இடதுகை பேட்ஸ்மேன் இல்லை.
     
  • தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய் நல்ல தொடக்கத்தைத் தர தவறுகின்றனர். முதல் 2, 3 ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் இருப்பது அணிக்கு சாதகம்தான் என்றாலும், அவர்களால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டில் விளையாட முடியவில்லை. வாட்சன் சில பந்துகளை சரியான டைமிங்கில் எதிர்கொண்டாலும், முரளி விஜய் மிகவும் மோசமாக திணறுகிறார். தொடக்கத்தில் ரன் ரேட் உயராததால், நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கூடுகிறது.

  • சென்னை அணியின் முதல் 3 ஆட்டங்களிலும் பாப் டு பிளெஸ்ஸி ஜொலித்திருந்தாலும், அவருடைய இயல்பான ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை. அவருக்கும் சரியான டைமிங் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் கடைசி கட்டத்தில்தான் அவரால் ஸ்டிரைக் ரேட்டை உயர்த்த முடிந்தது. எனினும், அவர் இதுபோன்ற ஆட்டங்களை தொடர்ந்து வெளிப்படுத்தினால், மற்ற பேட்ஸ்மேன்களும் கைகொடுத்தால் அந்த நம்பிக்கையிலேயே வரும் நாள்களில் அவரது இயல்பான ஆட்டம் வந்துவிடும்.

பந்துவீச்சு:

  • பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வெறும் 5 பந்துவீச்சாளர்களுடனே சென்னை அணி களமிறங்குகிறது. டி20 கிரிக்கெட்டில் 6-வது பந்துவீச்சாளர் அணியை சமநிலை அடையச் செய்வார். ஒரு பந்துவீச்சாளர் அதிகம் ரன் கொடுத்தால், 6-வது பந்துவீச்சாளரைக் கொண்டு 2 ஓவர்களாவது சரி செய்யலாம். இந்த வாய்ப்புக்கு இடமில்லாமல் சென்னை அணி திணறுகிறது. அதிகம் ரன்களைக் கொடுத்தாலும்கூட சாவ்லாவும், ஜடேஜாவும் 4 ஓவர்கள் வீச வேண்டிய சூழல் உள்ளது.
     
  • மற்ற அணிகளில் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் ஜொலிக்கும் நிலையில், இங்கு பியூஷ் சாவ்லா ஆதிக்கம் செலுத்தத் தவறுகிறார். இவர் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், எதிரணி பேட்ஸ்மேன்கள் இவரது பந்துவீச்சை எவ்வித அழுத்தமும் இல்லாமல் அசால்ட்டாக எதிர்கொள்கின்றனர். ஒரு முனையில் இவர் அழுத்தம் கொடுத்தாலே, மறுமுனையில் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் விழ வாய்ப்பு உள்ளது. இதில் சறுக்குகிறார் சாவ்லா.

  • ஜடேஜாவும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் விக்கெட்டுகளையும் வீழ்த்தாமல் ரன்களை வாரி வழங்குகிறார்.
     
  • வேகப்பந்துவீச்சில் சென்னையின் நம்பிக்கை நட்சத்திரம் தீபக் சாஹர் சோபிக்கத் தவறுகிறார். பவர்பிளே பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்படும் சாஹர் 3 ஆட்டங்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதில் 2 விக்கெட்டுகள் நடு ஓவரிலும், கடைசி கட்டத்திலும் வீழ்த்தியிருக்கிறார். பவர்பிளேவில் பந்தை ஸ்விங் செய்து, விக்கெட்டுகளை வீழ்த்தும் சாஹர் அணிக்குத் திரும்ப வேண்டும். பவர்பிளேவில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தினாலே எதிரணிக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும்.
     

ஹேசில்வுட், என்கிடி இருவரில் ஒருவர் மட்டுமே விளையாடும் நிலை நேரிட்டுள்ளது. என்கிடி கடந்த ஆட்டத்தில் ஒரு ஓவரில் மட்டும் நோ பால், வைட், சிக்ஸர்கள் என ரன்களை வாரி வழங்கியதால், தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. ஹேசில்வுட் தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர், அழுத்தம் தரக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்தது. சர்வதேச கிரிக்கெட் அளவில் அவர் அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆனால், கடைசி கட்டத்தில் அவருடைய பந்துவீச்சு திறன் பற்றி இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

எனினும், இவர்கள் இருவரில் இதுவரை பெரிதளவு பிரச்னை இல்லை. என்கிடியின் அந்த ஒரு ஓவரை மட்டுமே வைத்து அவரது திறனை குறைத்து மதிப்பிட முடியாது. 

சாம் கரண் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் நம்பிக்கையாகத் திகழ்கிறார். பேட்டிங்கில் அவரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் களமிறக்கலாம் என்ற நம்பிக்கையை கேப்டனுக்கு அளிக்கிறார். இது முக்கியத்துவம் வாய்ந்தது.

பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன..?

சென்னை அணியில் நிச்சயம் மாற்றங்கள் தேவைப்படுகிறது. அடுத்தடுத்த ஆட்டங்களில் நிச்சயம் மாற்றங்களைப் பார்க்கலாம். ராயுடு காயத்திலிருந்து மீண்டால், பாதி பிரச்னைகள் குறைந்துவிடும். ரன் ரேட்டை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தைப்போல்.

பேட்டிங்:

முதலில் தொடக்கத்தைச் சரி செய்ய வேண்டும். வாட்சன் அல்லது முரளி விஜய் அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வாட்சன் நீக்கப்பட்டால், வெளிநாட்டு வீரர். மாற்று வீரராக இம்ரான் தாஹிரை அணியில் சேர்க்கலாம். சமீபத்தில் முடிந்த கரீபியின் பிரீமியர் லீக்கில்கூட நல்ல நிலையில்தான் விளையாடியுள்ளார் தாஹிர். அவரது வருகை அணிக்கு நிச்சயம் யானை பலம் சேர்க்கும்.

வாட்சனுக்கு மாற்றாக தொடக்க ஆட்டக்காரராக ராயுடு அல்லது டு பிளெஸ்ஸி களமிறக்கப்படலாம். இவர்கள் பவர்பிளேவில்  துரிதமாக ரன் சேர்த்து எதிரணிக்கு நெருக்கடியளிக்கலாம். இதைப் பயன்படுத்தி மறுமுனையில் இருக்கும் முரளி விஜய் ஃபார்முக்குத் திரும்பலாம்.

ஃபார்முக்குத் திரும்ப வேண்டியது முரளி விஜய் மட்டுமல்ல, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இழந்த ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும்.

தொடக்கத்தில் ராயுடு மற்றும் டு பிளெஸ்ஸி சற்று ஆறுதல் தொடக்கம் அளித்தால், நடுவரிசையில் நெருக்கடி இருக்காது. தோனி நீண்ட நாள்களுக்குப் பிறகு பேட்டிங் செய்வதால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காலம் எடுக்கும் என்று அவரும், பயிற்சியாளர் பிளெமிங்குமே தெரிவித்துவிட்டனர். எனினும், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி அடித்த 3 சிக்ஸர்கள் நம்பிக்கையளிக்கிறது. மற்ற பேட்ஸ்மேன்களைவிட தோனி விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கத்தில் அவர்கள் வலுசேர்க்கும் பட்சத்தில் கடைசி கட்டத்தில் தோனி பொறுப்பை எடுத்துக்கொள்ளலாம். சாம் கரண் தோனிக்கு உதவலாம்.

பந்துவீச்சு:

பந்துவீச்சில் சாவ்லாக்குப் பதில் ஓரிரு ஆட்டங்களில் மற்றொரு மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளரான கரண் சர்மாவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம்.

ஒருவேளை தொடக்கத்தில் வாட்சனுக்குப் பதில் முரளி விஜய் நீக்கப்பட்டால், சோதனை முயற்சியாக என்கிடி மற்றும் ஹேசில்வுட் இருவருக்கு ஓய்வளித்துவிட்டு தாஹிரைச் சேர்க்கலாம். வேகப்பந்துவீச்சுக்கு ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பளிக்கலாம். கடைசி கட்டத்தில் இவர் பேட்டை நன்கு சுழற்றுவார் என்பது கூடுதல் தகவல்.

இதில் மற்றுமொரு அம்சமாக ஒருவேளை கரண் சர்மா சிறப்பாக பந்துவீசினாலோ அல்லது பியூஷ் சாவ்லாவே அழுத்தம் தரத் தொடங்கினாலோ, தாஹிருக்குப் பதில் காயத்திலிருந்து மீண்ட பிறகு பிராவோவை அணியில் சேர்த்து முயற்சித்துப் பார்க்கலாம். சாம் கரண் சிறப்பாக விளையாடி வருவதால், தற்போதைக்கு அவரைத் தொந்தரவு செய்வது சரியாக இருக்காது. பிராவோ பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலம் சேர்ப்பார்.

சாம் கரண் தவிர்த்து அணியில் 5 பந்துவீச்சாளர்கள் அவசியம். இதனைக் கருத்தில்கொண்டு ஷர்துல் தாகூர் சேர்க்கப்படலாம். 

இதுபோன்ற மாற்றங்களைச் செய்து முயற்சிப்பதுவே வரும் ஆட்டங்களில் சென்னைக்கு நல்ல முடிவுகளை அளிக்கும். கடந்த சீசனில் சொதப்புபவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தாலும், சென்னை அணி வெற்றி பெற்றுக்கொண்டிருந்தது. அதனால், அது சிக்கல் ஏற்படுத்தவில்லை.

ஆனால், இந்த முறையோ சென்னை அணி தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அதனால், மாற்றங்கள் அவசியம்.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை 14 ஆட்டங்கள் என்பதால், பல சோதனைகளைச் செய்து முயற்சிக்கலாம். அனைத்து சோதனை முயற்சிகளையும் முதல் 7 ஆட்டங்களுக்குள் செய்து பார்த்தால், கடைசி 7 ஆட்டங்களில் அணி சரியாக அமையும். பிளே ஆப் சுற்றுக்கு அணி தயாராகிவிடும். மற்றுமொரு அம்சமாக சென்னை அணியின் அடுத்த ஆட்டத்துக்கு இன்னும் ஒரு வாரம் இடைவெளி உள்ளது.

இந்த இடைவெளி நிச்சயம் அணிக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தலாம். வீரர்கள் காயங்களிலிருந்து மீண்டு வரலாம். பயிற்சியை தீவிரப்படுத்தலாம். இந்த இடைவெளியில் அணியை மறுஆய்வுக்குட்படுத்தி சரியான வீரர்களைத் தேர்வு செய்து சமநிலையான அணியை உருவாக்கலாம்.

வீரர்களும் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு இழந்த ஃபார்மை மீட்க வேண்டும். அணியில் எத்தனை மாற்றங்களை உண்டாக்கினாலும், அணியை சரியான வீரர்களைக் கொண்டு சமநிலைப்படுத்தினாலும், ஃபார்முக்குத் திரும்பவில்லையென்றால்  பலனில்லை.

அனைவரும் பொது முடக்க காலம் என நீண்ட இடைவெளிக்குப் பிறகு, களமிறங்குவதால், கிரிக்கெட்டில் இது இயல்பான ஒன்றுதான். குறிப்பாக கரோனா தொற்று காரணமாக, சென்னை அணி மற்ற அணிகளைக் காட்டிலும் குறைவாகவே பயிற்சியை எடுத்துக்கொண்டது. ஐக்கிய அமீரகம் வந்தடைந்து 14 நாள்கள் சென்னை அணி தனிமையில் இருந்தது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. அதனால், வீரர்கள் ஃபார்முக்குத் திரும்ப சற்று காலம் எடுப்பது இயல்பு. ஆனால், அதை விரைவில் சரிசெய்ய வேண்டும். இதற்கான வாய்ப்பாக அடுத்த 7 நாள்கள் இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT