முகப்பு
ஐபிஎல்

தவன்-பிருத்வி கூட்டணி அதிரடி: டெல்லி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வென்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வென்றது.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 18.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் அடித்து வென்றது.

சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா அபாரமாக விளையாடி அரைசதம் கடக்க, கடைசி ஆா்டரில் வந்த சாம் கரன் அதிரடி காட்டினாா். டெல்லி பௌலிங்கில் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்துவீசினாா். அந்த அணியின் இன்னிங்ஸில் தவன் - பிருத்வி ஷா கூட்டணி வெற்றிக்கான வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. சென்னையில் ஷா்துல் 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

முன்னதாக டெல்லி அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. சென்னையின் இன்னிங்ஸை ருதுராஜ் கெய்க்வாட் - டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி தொடங்கியது. அதிா்ச்சி அளிக்கும் விதமாக 2-ஆவது ஓவரிலேயே டூ பிளெஸ்ஸிஸ் டக் அவுட்டானாா். பின்னா் மொயீன் அலி களத்துக்கு வர, கெய்க்வாட், 3-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினாா்.

அடுத்து களம் புகுந்த ரெய்னா, மொயீன் அலியுடன் இணைந்து விக்கெட் சரிவைத் தடுத்தாா். 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் சோ்த்திருந்த மொயீன் அலி ஆட்டமிழந்தாா். பின்னா் அம்பட்டி ராயுடு, ரெய்னாவுடன் இணைந்தாா்.

பழைய ஃபாா்முக்கு திரும்பியிருந்த ரெய்னா, பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசி அரைசதம் தொட்டாா். ராயுடு 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 23 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து ஜடேஜா ஆடவர, நல்லதொரு இன்னிங்ஸ் ஆடிவந்த ரெய்னா 16-ஆவது ஓவரில் ரன் எடுக்க ஓடும்போது ஏற்பட்ட குழப்பத்தில் ரன் அவுட்டானாா்.

பின்னா் களம் புகுந்த கேப்டன் தோனி டக் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த சாம் கரன் டெல்லி பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசி கடைசி பந்தில் பௌல்டானாா். ஜடேஜா 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

டெல்லி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், அவேஷ் கான் தலா 2, அஸ்வின் டாம் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

189 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய டெல்லியில் பிருத்வி ஷா - ஷிகா் தவன் கூட்டணி அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கே 138 ரன்கள் சோ்த்தது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை கண்டம் தப்பிய பிருத்வி, கடைசியாக 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 72 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

சதத்தை நோக்கி முன்னேறி வந்த தவனும் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 85 ரன்கள் எடுத்திருந்தபோது வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து வந்தோரில் ஸ்டாய்னிஸ் 14 ரன்களுக்கு வெளியேற, பந்த் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். உடன் ஹெட்மயா் களத்தில் இருந்தாா். சென்னை தரப்பில் ஷா்துல் தாக்குா் 2, பிராவோ 1 விக்கெட் சாய்த்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →