ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் 43-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ராஜஸ்தானுக்கு எவின் லீவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கத்தைத் தந்தனர். முதலிரண்டு ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்த இணை, இதன்பிறகு பவுண்டரிகளில் ரன் குவிக்கத் தொடங்கியது. இதனால், முதல் 5 ஓவர்களில் ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்தது.
பெரிய பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய நேரத்தில் ஜெய்ஸ்வால் 31 ரன்களுக்கு டேனியல் கிறிஸ்டியன் பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட் விழுந்தபோதிலும் லீவிஸ் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி ராஜஸ்தானுக்கான தனது முதல் அரைசதத்தை எட்டினார்.
முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். இதனால், 200 ரன்களை எட்டுவதற்கான சிறப்பான அடித்தளம் அமைந்தது.
இதையும் படிக்க | இஷான் கிஷனை நீக்கியது ஏன்?: ரோஹித் சர்மா விளக்கம்
ஆனால், லீவிஸ் விக்கெட்டுக்குப் பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது. ஜார்ஜ் கார்டன் வீசிய 12-வது ஓவரில் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் லீவிஸ்.
யுஸ்வேந்திர சஹால் வீசிய 13-வது ஓவரில் மஹிபால் லோம்ரோர் 3 ரன்களுக்கும், ஷபாஸ் அகமது வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் (19) மற்றும் ராகுல் தெவாட்டியா (2) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டனும் 6 ரன்களுக்கு சஹால் சுழலில் சிக்கினார்.
கடைசி ஓவரில் ரியான் பராக், கிறிஸ் மாரிஸ், சேத்தன் சகாரியா விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்ஷல் படேல் மிரட்டினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால், ஷபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளையும், டேனியல் கிறிஸ்டியன் மற்றும் ஜார்ஜ் கார்டன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.