ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது.
மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 6 ரன்கள் எடுத்தும், இஷான் கிஷன் 0 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதன்பின் சூர்யகுமார் யாதவ் (10 ரன்கள்), முகமது நபி (23 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 52 ரன்களுக்கு மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய நேஹல் வதேரா 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். திலக் வர்மா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 20-வது ஓவரை வீசிய சந்திப் சர்மா அந்த ஓவரில் வெறும் 3 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் மற்றும் யுஸ்வேந்திர சஹால் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.