டி20 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றையப் போட்டியில் முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி வெறும் 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் எடுத்து அசத்தினர்.
ஆடவர் டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் முதல் 10 ஓவர்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக, நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தில்லிக்கு எதிரான போட்டியில் முதல் 10 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. நேற்றையப் போட்டியில் 167 ரன்கள் அடித்ததன் மூலம், தங்களது சொந்த சாதனையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் முறியடித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் முதல் 10 ஓவர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்
167/0 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னௌவுக்கு எதிராக, 2024
158/4 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - தில்லிக்கு எதிராக, 2024
148/2 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பைக்கு எதிராக, 2024
141/2 - மும்பை இந்தியன்ஸ் - ஹைதராபாதுக்கு எதிராக, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.