சிஎஸ்கே விளையாடும்போது சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் காணப்படும் வழக்கமான கூட்டத்தை நேற்றையப் போட்டியில் பார்க்கமுடியவில்லை.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மே 24) குவாலிஃபையர் 2 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வழக்கமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டி நடைபெறும் நாள்களில் மாலை முதலே வாலஜா சாலையில் கூட்டம் அலைமோதும். ஆனால், நேற்று மாலை 6 மணி ஆனபோதிலும், வாலஜா சாலையில் கூட்டத்தைக் காண முடியவில்லை.
ஐபிஎல் போட்டி நாள்களில் சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் விளையாட்டுப் பொருள்களுக்கான கடைகள் மற்றும் சிஎஸ்கே அணியின் ஜெர்சியினை விற்பனை செய்யும் கடைகள் என விளையாட்டுத் துறை சம்பந்தப்பட்ட பல கடைகளும் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், நேற்று அந்த விதமான விறுவிறுப்பு என்பது இல்லவே இல்லை. சென்னை அணிக்கான போட்டிகளின்போது ஜெர்சிகளை சாலைகளில் நின்று விற்றுக் கொண்டு நல்ல லாபம் ஈட்டும் விற்பனையாளர்களையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் பாட் கம்மின்ஸ் மற்றும் சஞ்சு சாம்சனின் ஜெர்சிகளை விற்றுக் கொண்டிருந்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. குவாலிஃபையர் 2 போட்டி மற்றும் இறுதிப்போட்டி என இரண்டு போட்டிகளும் சென்னையில் நடைபெறுகிறது என்பதால், இந்த முறை கண்டிப்பாக சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆர்சிபிக்கு எதிரான தோல்வி சிஎஸ்கே ரசிகர்களின் கனவை தகர்த்தது. இதனால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
33,000 இருக்கை வசதிகளைக் கொண்ட சேப்பாக்கம் மைதானத்துக்கு, நேற்றையப் போட்டியைக் காண 29,255 பேர் சென்றிருந்தபோதிலும், ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வே மைதானத்தில் இருந்தது. சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளில் இருக்கும் ஆரவாரம் நேற்று இல்லை. குறிப்பாக, எம்.எஸ்.தோனி இல்லாத போட்டி என்பதால், மைதானத்தில் பெரிய அளவில் எந்த ஒரு ஆரவாரமும் இல்லை.
ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.