சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனியை புகழ்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 22-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை இரவு மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, பிரியன்ஷ் அதிரடி சதத்தால் 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சென்னை அணி, 20 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் பின்னதாக களமிறங்கும் தோனியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 5-வது வீரராக களமிறங்கினார்.
3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த தோனி, கடைசி ஓவரில் அவுட்டானார்.
முன்னதாக களமிறங்கிய தோனி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தோனியை புகழ்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பஞ்சாப் அணி வீரர்களை பதற்றம் அடையச் செய்த 43- வயதுடைய விவசாயி. தனக்கான தோரணையோடு தோனி களத்தில் தொடர்கிறார். மரம் நடும் சேவையை மாற்றிக்கொண்டு மஞ்சள் ரசிகர்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜெயக்குமாரின் பதிவுக்கு சென்னை அணி ரசிகர்கள் வரவேற்றும் விமர்சித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.