கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைனை அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (ஏப்ரல் 11) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஸ்கேவை வீழ்த்தியது.
சுனில் நரைனுக்கு பாராட்டு
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரைனை அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சில பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம். ஏனெனில், அவர்கள் எவ்வாறு பந்துவீசுவார்கள் என்பதை கணிப்பது மிகவும் கடினம். சுனில் நரைன் அபாரமாக பந்துவீசுகிறார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம். வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை எதிர்கொள்வதும் கடினம். அவர்கள் எப்போதும் பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சித்து வருகின்றனர். அவர்களிடம் நிறைய பந்துவீச்சு திட்டங்கள் இருக்கின்றன.
பேட்டிங்கில் சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேலும் வலு சேர்க்கிறார். சுனில் நரைன் அதிரடியாக விளையாடப் போகிறார் என்பது அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் தெரியும். சுனில் நரைன் கடினமாக பயிற்சி மேற்கொள்கிறார். அவர் எப்போதும் தவறாமல் பயிற்சியில் ஈடுபடுகிறார். அவர் பயிற்சியை தவறவிட்டு நான் பார்த்ததாக நினைக்கவில்லை என்றார்.
சிஎஸ்கேவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரைன் 4 ஓவர்களில் 13 வெறும் ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர் 18 பந்துகளில் 44 ரன்கள் (2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) விளாசினார்.
பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.