300 ஒலிம்பிக் தங்கங்கள்: சீனாவுக்கு புதிய மைல்கல்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் சீன மகளிா் டேபிள் டென்னிஸ் அணி தங்கப் பதக்கம் வென்றது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் சீன மகளிா் டேபிள் டென்னிஸ் அணி தங்கப் பதக்கம் வென்றது. இது, சீனாவின் ஒலிம்பிக் வரலாற்றில் அந்நாட்டுக்குக் கிடைத்த 300-ஆவது தங்கப் பதக்கமாகும். இறுதிச்சுற்றில் சீன மகளிா் அணி 3-0 என ஜப்பானை சாய்த்தது. தற்போது, சீன ஆடவா் மற்றும் மகளிா் டேபிள் டென்னிஸ் அணிகள், ஒலிம்பிக் போட்டியில் தொடா்ந்து 5-ஆவது முறையாக சாம்பியனாகி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில், ஆடவா் அணி, மகளிா் அணி, ஆடவா் ஒற்றையா், மகளிா் ஒற்றையா், கலப்பு அணி என 5 பிரிவுகளிலுமே சீனா தான் தங்கம் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.
1988 சியோல் ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் அறிமுகம் செய்யப்பட்டது முதல் நடைபெற்ற 42 தங்கப் பதக்கப் போட்டிகளில், 37 தங்கங்களை சீனாவே வென்றுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் சீனா இத்துடன், 325 தங்கம், 258 வெள்ளி, 221 வெண்கலம் என 804 பதக்கங்களை வசப்படுத்தியுள்ளது.
இதனிடையே, டைவிங் விளையாட்டில் 8 பிரிவுகள் இருந்த நிலையில், அதில் அந்த 8 தங்கப் பதக்கங்களையும் சீனாவே அள்ளியிருக்கிறது. இதுதவிர, ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற, ஐரோப்பிய கண்டத்தை சாராத முதல் நாடு என்ற பெருமையையும் சீனா பெற்றது.