முகப்பு
ஸ்பெஷல்

கெய்லும் ரெய்னாவும் விளாசிய சிக்ஸர்கள்: உத்தியை மாற்றி மீண்டு வந்த ரஷித் கான்!

இதுபோன்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை. அப்படிப்பட்ட அனுபவம் கிடைத்ததும் நல்லதற்குத்தான்....

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:00 PM
பகிர்:

இந்த வருட ஐபிஎல் போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் அடுத்தடுத்த ஆட்டங்களில் மிக மோசமாகப் பந்துவீசினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ரஷித் கான். 

ஏப்ரல் 19 அன்று பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தி 55 ரன்களை வாரி வழங்கினார். அந்த ஆட்டத்தில் ரஷித் கான் பந்துவீச்சில் 7 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அனைத்தையும் அடித்தவர் கிறிஸ் கெயில். அதிலும் ஒரு ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் அடித்தார் கெயில். ரஷித் கான் சொதப்பியதால் அந்த ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது ஹைதராபாத். 

ஏப்ரல் 22 அன்று சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தி 49 ரன்கள் கொடுத்தார் ரஷித் கான். இதில் ரஷித் கான் பந்துவீச்சில் 3 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அடுத்தடுத்த பந்துகளில் இரு சிக்ஸர்கள் அடித்தார் ரெய்னா. இந்த ஆட்டத்திலும் (4 ரன்கள் வித்தியாசத்தில்) தோற்றது ஹைதராபாத். 

ஆனால் இன்று புள்ளிகள் பட்டியலில் 10 ஆட்டங்களில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது ஹைதராபாத். அந்த இரு ஆட்டங்களைத் தவிர வேறு எதிலும் இதுவரை அந்த அணி தோற்கவில்லை. ரஷித் கானின் பந்துவீச்சும் அதன்பிறகு அட்டகாசமாக உள்ளது. அந்த மோசமான அனுபவங்களில் இருந்து மீண்டுவந்து, தற்போது 10 ஆட்டங்களின் முடிவில் ரஷித் கானின் எகானமி - 7.15 என்று மாறியுள்ளது. 

இந்த மாற்றம் குறித்து ஒரு பேட்டியில் ரஷித் கான் கூறியதாவது:

அந்த இரு ஆட்டங்களுக்குப் பிறகு, பயிற்சியாளர்களிடம் விவாதித்தேன். என்னுடைய வீடியோக்களை அனலிஸ்டுடன் சேர்ந்து பார்த்தேன். நான் மிகவும் ஃபுல் வகைப் பந்துகளை வீசியதை அறிந்தேன். இதனால் கவலைப்பட ஒன்றுமில்லை என்று பயிற்சியாளர்கள் கூறினார்கள். இதில் உள்ள பிரச்னை என்னவென்றால் நான் ஃபுல் வகைப் பந்துகளை வீசியதைக் கொண்டு பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடியுள்ளார்கள் என்றார்கள். பேக் ஆஃப் எ லென்த் வகைப் பந்துகளை வீசினால் பேட்ஸ்மேனால் என்னுடைய பந்துவீச்சை அடிக்கமுடியாது என்று அறிவுரை கூறினார்கள். 

மும்பைக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் லென்த் வகைப் பந்துகளை வீச முடிவு செய்தேன். எங்கள் அணிப் பயிற்சியாளர்கள் டாம் மூடி, விவிஎஸ் லஷ்மண், முரளிதரன் ஆகிய மூவரும் ஒரே அறிவுரைதான் சொன்னார்கள் - கிரிக்கெட் வாழ்வில் அனைவரும் மேடு பள்ளங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதிலிருந்துதான் நாம் கற்றுக்கொள்ளமுடியும் என்றார்கள். 

இதுபோன்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை. அப்படிப்பட்ட அனுபவம் கிடைத்ததும் நல்லதற்குத்தான். இதிலிருந்து என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. வருங்காலத்துக்கு என்னைத் தயார் செய்ய உதவியது. பயிற்சியாளர்களின் அறிவுரைகள் எனக்கு வெற்றிகரமாக அமைந்தன என்றார்.

அதுவும் உண்மைதான். அந்த இரு மோசமான பந்துவீச்சுகளுக்குப் பிறகு ரஷித் கானின் பந்துவீச்சு எப்படி அமைந்தன தெரியுமா?

2/11, 3/19, 1/31, 2/23, 1/31.

தற்போது, அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ரஷித் கானுக்கு 6-வது இடம். 13 விக்கெட்டுகள்,  எகானமி - 7.15.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.