மஞ்ச்ரேக்கரின் கடுமையான விமரிசனம்: பொலார்ட் பதிலடி!
கடைசி ஆறு ஏழு ஓவர்களில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன். அதற்கு முன்பு வந்து...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸைத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ். இதன்மூலம் இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த மும்பை அணியில், 17-ஆவது ஓவரில் போலார்ட் (17 ரன்கள்) ஆட்டமிழந்தார். கடைசியில், மும்பை அணி 19.5 ஓவர்களில் 180 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. நிதிஷ் ராணா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களை எடுத்தார்.
இந்நிலையில், வர்ணனையில் பொலார்டைப் பற்றிக் கடுமையாக விமரிசித்தார் முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர். அவர் கூறியதாவது: பொலார்ட்டைப் பற்றி எண்ணும்போது அவர் கடைசி ஆறு ஏழு ஓவர்களில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன். அதற்கு முன்பு வந்து ஆடக்கூடிய அளவுக்கு அவருக்கு மூளை கிடையாது என்றார்.
இதை ஏற்றுக்கொள்ளாத பொலார்ட் ட்விட்டரில் மஞ்ச்ரேக்கரை விமரிசனம் செய்துள்ளார். உங்கள் வாயிலிருந்து நல்லது ஏதாவது வருமா? ஏனெனில் வாய்க்கு வந்தபடி பேசுவதற்காக உங்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது. மூளையில்லாதவர் என்று விமரிசனம் செய்தது என்னை எந்தளவு பாதித்தது என்று உங்களுக்குத் தெரியுமா? வார்த்தையை விட்டுவிட்டால் பிறகு அதை மீண்டும் அள்ளமுடியாது என்று மஞ்ச்ரேக்கருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.