செய்திகள்

இரண்டாவது ஒரு நாள் போட்டி: பும்ரா வேகத்தில் 236 ரன்களுக்கு சுருண்ட இலங்கை! 

DIN

பல்லகெலே: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவின் வேகத்தில் 236 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.  தம்புல்லாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு பல்லகெலே மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி பீல்டிங்கினைத்  தேர்வு செய்தார்.

இந்திய அணியினைப் பொறுத்த வரை முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனால் இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திசாரா, வனிது, சண்டகன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக துஷ்மந்தா, அகிலா தனஞ்ஜெயா மற்றும் மிலிந்தா ஸ்ரீவர்தனா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர்  முதலில் ஆட்டத்தினைத் துவங்கினர். இலங்கை அணி 7.4 ஓவரில் 41 ரன்கள் எடுத்திருக்கும்போது தனது முதல் விக்கெட்டை இழந்தது. டிக்வெல்லா 24 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ப்ரா பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து குசால் மெண்டில் குணதிலகாவுடன் ஜோடி சேர்ந்தார். குணதிலகா 19 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஸ்டம்பிங் ஆகி ஆட்டம் இழந்தார். மெண்டிஸ் 19 ரன்னில் சாஹல் பந்தில் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேறினார்.

அடுத்து களம் இறங்கிய இலங்கை அணித்தலைவர் தரங்காவை 9 ரன்னில் பாண்டியா வெளியேற்றினார். மேத்யூஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் பந்தில் வெளியேற இலங்கை அணி 121 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறத் துவங்கியது.

6-வது விக்கெட்டுக்கு ஸ்ரீவர்தனா உடன் கபுகேதரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. ஸ்ரீவர்தனா அதிரடியாக விளையாடி 58 பந்தில் 58 ரன்கள் சேர்த்து பும்ப்ரா பந்தில் ஆட்டம் இழந்தார். கபுகேதரா 40 ரன்கள் எடுத்து பும்ப்ரா பந்தில் க்ளீன் போல்டானார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது.

இறுதியாக இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ப்ரா 10 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 2 விக்கெட்டுகளைக்  கைப்பற்றினார்.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி தற்பொழுது விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT