மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த நட்சத்திர ஆல்-ரவுண்டராகத் திகழ்பவர் டுவைன் பிராவோ. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என்று அனைத்திலும் திறமையானவர். தற்போது 34 வயதை கடந்துள்ள பிராவோ, தான் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் திரும்புவது சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் என்னால் முடிந்த வரை கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அவ்வாறு விளையாடும் அனைத்து தருணங்களும் மகிழ்ச்சியாக அமைகிறது. ஆனால், நான் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் திரும்புவது சந்தேகம்தான்.
நான் முழு உடற்திறனுடனும், ஆட்டத்திறனுடனும் இருந்தபோதுதான் மே.இ.தீவுகள் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். ஆனால், அதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. அப்படி இருக்கையில் தற்போது எனது வயது 34-ஐ கடந்துவிட்டது. எனவே இனிவரும் காலங்களில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
தற்போது தேசிய அணிக்குத் திரும்புவதை விட தொடர்ந்து கிரிக்கெட் விளையாட மட்டுமே விரும்புகிறேன். அதுவே எனது நோக்கமாகவும் உள்ளது. கடந்த 9 மாதங்களாக காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தமளித்தது.
இனி வரும் காலங்களில் இந்தியன் பிரீமியர் லீக், பிக்பாஷ் லீக், வங்கதேச பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்டவைகளில் மட்டுமே விளையாடும் நிலையில், இருக்கிறேன். தற்போது விளையாடி வரும் ஷார்ஜா டி10 லீக் சற்று வித்தியாசமானதாக உள்ளது. இதில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன் என்றார்.
பிராவோ, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கடந்த 2010-ல் டெஸ்ட் போட்டியிலும், 2014-ல் ஒருநாள் போட்டியிலும் கடைசியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.