தெ.ஆ. தொடர்: முதல் டெஸ்ட் போட்டியில் தவன் விளையாடுவது சந்தேகம்!
ஜனவரி 5-ம் தேதி தொடங்கவுள்ள முதல் டெஸ்டில் தவன் விளையாடுவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது...
கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று அறியப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களைக் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ளது இந்திய அணி. கடந்த 25 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை. அதிகபட்சமாக, 2010-11 காலகட்டத்தில் 2 போட்டிகளைக் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது இந்தியா.
இந்நிலையில் தொடக்க வீரர் ஷிகர் தவனுக்குக் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 5-ம் தேதி தொடங்கவுள்ள முதல் டெஸ்டில் தவன் விளையாடுவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தவனுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய காயத்தின் நிலை குறித்து இன்னும் ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும் என்று அறியப்படுகிறது. எனினும் தென் ஆப்பிரிக்க வந்துள்ள இந்திய அணியில் தவனுடன் இடம்பெற்றுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் தவன் பங்கேற்க வாய்ப்புண்டு என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இல்லாவிட்டால் விஜய்யும் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். காயம் காரணமாக தவன் டெஸ்ட் தொடரிலிருந்து விலகினால் அபினவ் முகுந்த் இந்திய அணிக்குத் தேர்வாகவும் வாய்ப்புண்டு.
இதே போல தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்குக்கு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஜிம்பாப்வே உடனான டெஸ்ட் போட்டியில் காயம் ஏற்பட்டதால் பாதியில் விலகினார் டி காக். முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீசியபோது டி காக் கீப்பிங் செய்யவில்லை. அதற்குப் பதிலாக டிவில்லியர்ஸ் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார்.