செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ்: ரோஜர் ஃபெடரர் சாம்பியன்

DIN

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 
சீனாவின் ஷாங்காய் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய ஃபெடரர், முதல் செட்டின் முதல் கேமிலேயே நடாலின் சர்வீûஸ முறியடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஃபெடரர், அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் 5-ஆவது கேமில் தனது சர்வீûஸ இழந்தார் நடால். இதன்பிறகு அவரால் சரிவிலிருந்து மீள முடியவில்லை. இதனால் அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி எளிதாக வெற்றி கண்டார் 
ஃபெடரர்.
நடாலுக்கு எதிராக தொடர்ச்சியாக 5-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார் ரோஜர் ஃபெடரர். இந்த ஆண்டில் 6-ஆவது பட்டம் வென்றிருக்கிறார் ஃபெடரர். அதேநேரத்தில் ஒட்டுமொத்தத்தில் அவர் வென்ற 94-ஆவது பட்டம் இது. இதன்மூலம் இவான் லென்டிலின் சாதனையை சமன் செய்தார் 
ஃபெடரர். இதுதவிர நடாலுடன் இதுவரை 38 ஆட்டங்களில் மோதியுள்ள ஃபெடரர், 15-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார். 
வெற்றி குறித்துப் பேசிய ஃபெடரர், "இந்த வாரம் கடினமானதாக அமைந்தது. தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் விளையாடுவது என்பது எந்தவொரு வீரருக்குமே உடலளவில் கடினமானதாகும். எனினும் இந்த வாரம் முழுவதும் நான் சிறப்பாக ஆடியதாக நினைக்கிறேன். மிகச்சிறப்பாக சர்வீஸ் அடித்ததோடு, சில அற்புதமான ஆட்டங்களை (டெல் போட்ரோவுக்கு) ஆடியிருக்கிறேன்' என்றார்.
தோல்விக்குப் பிறகு பேசிய நடால், "இந்த ஆண்டு எனக்கு உணர்வுபூர்வமானதாக அமைந்தது. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் நான் இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாம். அதேநேரத்தில் எதிராளி சிறப்பாக ஆடுகிறபோது அது நமக்கு மிகுந்த சவாலாக மாறிவிடுகிறது' என்றார்.
வலது முழங்காலில் ஏற்பட்ட பிரச்னைதான் தோல்விக்கு காரணமா என நடாலிடம் கேட்டபோது, அதை மறுத்த அவர், "அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. இறுதி ஆட்டத்தில் தோற்றுவிட்டு அப்படிப் பேசுவது சரியானதாக இருக்காது' என்றார்.
கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் தனது முதல் பட்டத்தைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருந்தார். ஆனால் அதை ஃபெடரர் தகர்த்துவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT