முகப்பு
செய்திகள்

காமன்வெல்த் கேம்ஸ்: சதீஷ் சிவலிங்கத்தின் தங்க வேட்டை!

முதல் திருப்புமுனை 2014 காமன்வெல்த் கேம்ஸ் போட்டியில்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:40 PM
பகிர்:


முதல் திருப்புமுனை 2014 காமன்வெல்த் கேம்ஸ் போட்டியில்.

கிளாஸ்கோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் 328 கிலோ (149+179) எடையைத் தூக்கி தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றார். அப்போதுதான் சதீஷ் இந்தியா முழுக்கக் கவனம் பெற்றார். இப்போது அதே காமன்வெல்த் கேம்ஸில் மீண்டும் தங்கம் வென்றுள்ளார் சதீஷ் சிவலிங்கம்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது. தொடக்க நாளான வியாழக்கிழமை பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு புதிய சாதனையுடன் முதல் தங்கத்தை வென்றார். ஆடவர் பிரிவில் பி.குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார். 2-வது நாளான வெள்ளிக்கிழமையும் பளுதூக்குதலில் இந்திய வீரர்கள் தங்கள் முத்திரையை பதித்தனர். சஞ்சிதா சானுவுக்கு தங்கமும் தீபக் லேதருக்கு வெண்கலமும் கிடைத்தன.

இந்நிலையில் இன்றும் பளு தூக்குதலில் தங்க வேட்டை நடத்தியது இந்திய அணி. தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். இது இவருடைய இரண்டாவது காமன்வெல்த் கேம்ஸ் தங்கமாகும். 2014-ல் நடந்த போட்டியிலும் அவர் தங்கம் வென்றார். இன்று மொத்தமாக 317 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். இதையடுத்து சதீஷ் சிவலிங்கத்துக்குத் தமிழக முதல்வர் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். தங்கம் வென்று தமிழகம், இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள் என்று முதல்வர், சதீஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 2014-லிலும் அவருடைய தங்கப் பதக்கத்துக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை தமிழக அரசிடமிருந்து கிடைத்தது.

இன்று தங்கம் வென்றதன் மூலம், காமன்வெல்த் கேம்ஸில் ஆடவர் பிரிவில் இரு தங்கம் வென்ற முதல் இந்திய பளு தூக்குதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் சதீஷ் சிவலிங்கம்.

சதீஷ் குமாரின் தந்தை சிவலிங்கமும் முன்னாள் பளுதூக்கும் வீரர் தான். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். 1985 முதல் 2001 வரை ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். வேலூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் தற்போது பாதுகாவலராகப் பணியாற்றுகிறார். 

சதீஷ்குமார் சத்துவாச்சாரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்தபோது, தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் பளுதூக்க ஆரம்பித்தார். பிறகு திறமையின் அடிப்படையில் வேலூர் சத்துவாச்சாரி மலையடிவாரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சிக் கூடத்தில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிக்கச் சென்ற சதீஷுக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்ததால் படிப்பைப் பாதியில் கைவிட்டார். அதன்பிறகு, 2014 காமன்வெல்த் கேம்ஸில் தங்கம் வென்று புகழை அடைந்தார் சதீஷ் சிவலிங்கம்.

அப்போது, சதீஷின் தந்தை சிவலிங்கம் ஒரு பேட்டியில் கூறியதாவது: காலையில் 2 ஆம்லெட் மற்றும் 4 இட்லியும், மதியத்தில் கால் கிலோ சிக்கனுடன் சாதமும், இரவில் அரை லிட்டர் பாலும், சாதமும், ஏதெனும் ஒரு ஜூஸ்சும் சதீஷ் எடுத்துக்கொள்வார். வாரம் ஒருமுறை மட்டன் சாப்பிடுவார். மேலும் சத்து மாவு உணவுப்பொருள்களும் அவ்வப்போது வாங்கி சாப்பிடுவார். ஊக்க மருந்து எதுவும் தவறுதலாக உட்கொண்டு விடக்கூடாது என்பதில் கவனமாகச் செயல்படுவோம். உணவு பொருள்களின் தரத்தை ஒருமுறைக்கு இருமுறை பார்த்துவிட்டுதான் சாப்பிடுவார். காபி குடிக்க மாட்டார். நான் அதற்கு அனுமதியளிப்பதில்லை. காபியில் ‘காஃபெய்ன்’ என்னும் ஊக்க மருந்து கொஞ்சம் உண்டு. 

சதீஷ்குமாரின் தாய் ஒரு பேட்டியில் கூறியதாவது: மகன்களுக்காக நாங்கள் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. அவர்கள் வெற்றியாளர்களாக உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் சம்பாதித்ததை எல்லாம் செலவு செய்துள்ளோம் என்றார்.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்றபிறகு சதீஷ் குமார் கூறியதாவது: நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். இது கடினமான உழைப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் கிடைத்த பரிசு. எனது பெற்றோர் எங்கள் கிராமத்தில் உள்ளவர்களிடம் நான் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் என்று சொல்லி வந்தார்கள். அவர்களுடைய கனவை நான் நனவாக்கி இருக்கிறேன். என் தந்தை ராணுத்தில் பணியாற்றினார். அவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லவில்லை. எனவே நான் சர்வதேசப் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என அவர் விரும்பினார். என் தந்தைதான் பளுதூக்குதல் போட்டியில் என்னை ஈடுபடுத்தினார். 15 வயதில் என் கிராமத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியைத் தொடக்கினேன். கடந்த 4 ஆண்டுகள் வீட்டிலும், பாட்டியாலாவில் உள்ள தேசிய முகாமிலும், தங்கம் வெல்வதை மட்டுமே இலக்காக வைத்து பயிற்சியில் ஈடுபட்டேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன்  என்றார்.

இதன்பிறகு 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றார் சதீஷ். ஆனால் 77 கிலோ எடைப்பிரிவில் 11-வதாக வந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். எனினும் அவருக்கு மீண்டும் புகழைத் தேடித்தந்துள்ளது காமன்வெல்த் கேம்ஸ்.

தற்போதைய காமன்வெல்த் கேம்ஸிலும் காலில் காயத்துடன் போட்டியில் பங்கேற்றுள்ளார் சதீஷ். பதக்கம் பெறுவேன் என்று எனக்கு நம்பிக்கையேயில்லை. ஆனால் முழு உடற்தகுதி இல்லாமல் போனாலும் என்னால் தங்கம் வெல்ல முடிந்தது என்கிறார் 25 வயது சதீஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.