செய்திகள்

சதமடித்து இந்திய அணியைக் காப்பாற்றிய புஜாரா: முதல் நாளில் இந்தியா 250/9

புஜாரா எடுத்த 123 ரன்கள் இந்திய அணி கெளரவமான ஸ்கோர் எடுக்க மிகவும் உதவியுள்ளது...

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்து இந்திய அணியைப் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளார் புஜாரா.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில், இங்கிலாந்தில் சொதப்பியதுபோல இன்றும் இந்திய பேட்ஸ்மேன்கள் இந்திய ரசிகர்களை தங்களுடைய மோசமான பேட்டிங்கினால் ஏமாற்றினார்கள். மிகவும் எதிர்பார்த்த விராட் கோலி, கவாஜாவின் அற்புதமான கேட்சினால் 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். ராகுல் 2, விஜய் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். ரஹானேவும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்களில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைப் போல அதிரடியாக விளையாட முயன்ற ரிஷப் பந்த், 38 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். நிதானமாகவும் பக்குவமாகவும் விளையாடிய ஒரே வீரரான புஜாரா, 100 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டி வருகிறார். ஒருகட்டத்தில் 30 பந்துகளுக்கு மேல் அவரால் ஒரு ரன்னும் எடுக்கமுடியவில்லை. ஆனால் பதற்றம் அடையாமல் அணியின் நிலைமையைக் கருத்தில்கொண்டு பேட்டிங் செய்தார். புஜாராவின் முயற்சியினால் இந்திய அணி எப்படியும் 200 ரன்களைத் தாண்டிவிடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. புஜாரா 46, அஸ்வின் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு அஸ்வினின் ஆட்டம் இன்னும் சிறப்பாக அமைந்தது. புஜாராவுக்கு நல்ல இணையாக விளங்கினார். இந்தக் கூட்டணி 62 ரன்கள் வரை சேர்த்து இந்திய அணியைப் பெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றியது. எனினும் கம்மின்ஸின் அற்புதமான பந்தினால் 25 பந்துகளில் ஆட்டமிழந்தார் அஸ்வின். இதன்பிறகு வந்த இஷாந்த் சர்மா, 20 பந்துகளில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 153 பந்துகளில் அரை சதத்தை எட்டிய புஜாரா, பிறகு 231 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அவர் எடுத்துள்ள முதல் சதம் இது. 16-வது டெஸ்ட் சதம்.

எனினும் முதல் நாளின் இறுதிக்கட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார் புஜாரா. புஜாரா எடுத்த 123 ரன்கள் இந்திய அணி கெளரவமான ஸ்கோர் எடுக்க மிகவும் உதவியுள்ளது.

முதல் நாளின் முடிவில் இந்திய அணி, 87.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. ஷமி 6 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பிரதான பந்துவீச்சாளர்களான ஸ்டார்க், ஹேஸில்வுட், கம்மின்ஸ், லயன் ஆகிய நால்வரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் குரலில் நடக்கும் மோசடி! | AI Voice Cloning மோசடி நடப்பது எப்படி? | Cyber Shield

தெரியாமல் அனுப்பப்படும் பணம்! | UPI APP-கள் மூலம் மோசடி! | Cyber Security | Cyber Shield

“அவசர KYC புதுப்பிப்பு!”: வங்கி அதிகாரி போல பேசி மோசடி! | Cyber Security | Cyber Shield

Loan App-ல் Contact & Media Permission எதற்கு? Loan App Scam! | எளிய கடன் மோசடி! | Cyber Shield

மெயில் மூலம் நடக்கும் புதிய மோசடி! நீதிமன்ற LOGO, கையெழுத்து! ஏமாற வேண்டாம்!

SCROLL FOR NEXT