ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி: 166 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் இந்தியா 151/3
இந்திய அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 166 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 166 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது.
அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணியை 235 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தது இந்திய அணி. இதனால் முதல் இன்னிங்ஸில் 15 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆட்டம் சாதகமாக அமைவதால் இந்தியத் தொடக்க வீரர்களான முரளி விஜய்யும் ராகுலும் நம்பிக்கையுடன் விளையாடினார்கள். இந்தக் கூட்டணி முதல்முறையாக வெளிநாட்டில் அரை சதம் எடுத்தது. ஆரம்பத்தில் இருவரும் மிகக் கவனமாக விளையாடினார்கள். முதல் 9 ஓவர்களில் 11 ரன்கள்தான் கிடைத்தன. இதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார் ராகுல். கம்மின்ஸ் வீசிய 15-வது ஓவரில் ஒரு சிக்ஸும் பவுண்டரியும் அடித்தார். 53 பந்துகள் எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்த முரளி விஜய் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் நன்கு விளையாடி வந்த ராகுல் தவறான ஷாட்டால் 44 ரன்களில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டி20 ஆட்டத்தில் அடிக்கவேண்டிய ஷாட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்த முயன்று ஏமாற்றமடைந்தார். புஜாரா போல பக்குவத்துடன் விளையாடிருந்தால் ராகுலால் சதமடித்திருக்கமுடியும். ஆனால் ஒரு நல்ல வாய்ப்பை அவர் வீணடித்தார்.
3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. புஜாரா 11, கோலி 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகான ஆட்டம், சிறப்பான பேட்டிங்குக்கும் சிறப்பான பந்துவீச்சுக்கும் இடையேயான போட்டியாக அமைந்தது. ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் விராட் கோலியும் புஜாராவும் நிதானமாகவே விளையாடினார்கள். புஜாராவின் ஆட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாக கோலியும் நிதானமாகவே விளையாடினார். இந்திய அணிக்குச் சாதகமாக டெஸ்ட் ஆட்டம் திரும்புவதால் அதை வீணடித்துவிடக்கூடாது என்பதில் இருவருமே மிகுந்த அக்கறை காட்டினார்கள். புஜாரா இருமுறை நடுவரால் ஆட்டமிழக்க நேர்ந்தாலும் டிஆர்எஸ் உதவியுடன் அந்தத் தீர்ப்புகளை மாற்றிக்கொண்டார். 104 பந்துகள் எதிர்கொண்டு 34 ரன்கள் சேர்த்த கோலி, இன்றைய நாளின் இறுதியில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
3-ம் நாளின் முடிவில் இந்திய அணி 61 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 1, புஜாரா 40 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளையும் இதுபோல பொறுப்புடன் விளையாடி 250 ரன்கள் முன்னிலை பெற்றால் முதல் டெஸ்டில் இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.