பென் ஸ்டோக்ஸ் மீது காவல்துறை வழக்குப்பதிவு! ஐபிஎல்-லில் பங்கேற்பாரா?
கடந்த செப்டம்பர் 25 அன்று இரவு விடுதி ஒன்றில் நிகழ்ந்த தகராறில் தொடர்பு இருப்பதாக ஸ்டோக்ஸ் மீது...
கடந்த செப்டம்பர் 25 அன்று இரவு விடுதி ஒன்றில் நிகழ்ந்த தகராறில் தொடர்பு இருப்பதாக ஸ்டோக்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தால் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இயான் மோர்கன் தலைமையிலான இந்த அணியில், தடைக்காலத்தில் உள்ள பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்தார். இதனிடையே, இரவு விடுதி சம்பவத்தில் தொடர்புடைய அலெக்ஸ் ஹேல்ஸும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் தெருச்சண்டையில் ஈடுபட்டு அமைதியைக் குலைத்ததாக பென் ஸ்டோக்ஸ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பென் ஸ்டோக்ஸ், ரையான் அலி, ரையான் என மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டோக்ஸ் உள்ளிட்ட மூன்று பேர் பிரிஸ்டோல் நீதிமன்றத்துக்கு விரைவில் நேரில் வரவழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27, 28 அன்று ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. இதற்கான தேர்வுப்பட்டியலில் ஸ்டோக்ஸும் இடம்பெற்றுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஐபிஎல்-லில் கலந்துகொள்வது சந்தேகம் என்று அறியப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டோக்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: சம்பவம் குறித்த முழு விவரங்களையும் காவல்துறையிடம் தெரிவித்துவிட்டேன். என்னுடைய பெயர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் என்று நம்புகிறேன். என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் என் தரப்பு விவரங்கள் நீதிமன்றம் வழியாக மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதுவரை என் கவனம் கிரிக்கெட்டில் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ஸ்டோக்ஸ் மீது முடிவெடுப்பது குறித்து அடுத்த 48 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதால் அதிகாரபூர்வமாக அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புண்டு. மேலும் மார்ச், ஏப்ரலில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கவும் அவருக்குத் தடை விதிக்கப்படலாம்.
இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பிரிஸ்டோலில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அங்குள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் அதிகாலையில் வெற்றியைக் கொண்டாடியபோது, பென் ஸ்டோக்ஸுக்கும், அங்கு வந்த 27 வயது இளைஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் அவரைத் தாக்கியுள்ளார். அதில் முகத்தில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பென் ஸ்டோக்ஸைக் கைது செய்தார்கள். எனினும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இங்கிலாந்தின் ஆஷஸ் அணியிலிருந்து ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டார்.