தடுமாறும் இந்திய அணி: மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த தொடக்க வீரர்கள்!
13 ரன்களுக்குள் தொடக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்து இந்த டெஸ்டிலும் ஏமாற்றமளித்துள்ளார்கள்...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டிலும் இந்திய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்கள்.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா ஆகிய இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. செஞ்சுரியனில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை. தென் ஆப்பிரிக்காவில் தொடரை இழந்துவிட்டது ரசிகர்களுக்கு வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா இழந்துவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ரஹானேவும் அஸ்வினுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். பார்தீவ் படேல் இந்த டெஸ்டிலும் இடம்பெற்றுள்ளார். பாண்டியா உள்ளிட்ட 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹராஜுக்குப் பதிலாக அன்டிலே பெலுக்வாயோ இடம்பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு கடந்த 1992, 1997, 2006, 2013 ஆகிய ஆண்டுகளில் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறது. அவற்றில் ஒன்றில் கூட நமது அணி தோல்வியைச் சந்தித்ததில்லை.
இன்றும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. இதனால் இந்த டெஸ்டிலும் இந்திய தொடக்க வீரர்கள் ரன் எடுக்கச் சிரமப்பட்டார்கள். கேஎல் ராகுல், 7 பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன்னும் எடுக்கமுடியாமல் பிலாண்டரின் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அடுத்தச் சில ஓவர்களில் 8 ரன்களுடன் முரளி விஜய்யும் நடையைக் கட்டினார். ரபடா அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார். 13 ரன்களுக்குள் தொடக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்து இந்த டெஸ்டிலும் ஏமாற்றமளித்துள்ளார்கள்.
இந்திய அணி 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய தொடக்க வீரர்கள்
தவன் - 32 ரன்கள், சராசரி ரன்கள் - 16.00
விஜய் - 77 ரன்கள், சராசரி ரன்கள் - 15.40
ராகுல் - 14 ரன்கள், சராசரி ரன்கள் - 4.66
இந்த டெஸ்ட் தொடரில் 2-வது விக்கெட் வீழ்ந்தபோது இந்திய அணியின் ரன்கள்
கேப் டவுன் - 18 & 30
செஞ்சுரியன் - 28 & 16
ஜோஹன்னஸ்பர்க் - 13