இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி 20 தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக பல சாதனைகள் புரிந்துள்ளார் தோனி.
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான 3-ம் டி 20 கிரிக்கெட் ஆட்டம் பிரிஸ்டல் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 198 ரன்களைக் குவித்தது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹார்திக் பாண்டியா அபாரமாகப் பந்து வீசி 4/38 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கெளல் 2, சஹார், உமேஷ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். தோனி 5 கேட்சுகள் பிடித்தும் ஒரு ரன் அவுட்டை நிகழ்த்தியும் அசத்தினார்.
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 18.4 ஓவர்களிலேயே 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 100 ரன்களை குவித்து ரோஹித்தும், 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 33 ரன்களுடன் பாண்டியாவும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்தார் கோலி. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்குக் கிடைத்தது.
இந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் சில சாதனைகளை நிகழ்த்தினார்.
* சர்வதேச டி20 ஆட்டத்தில் ஐந்து கேட்சுகளைப் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை தோனி அடைந்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 5 கேட்சுகளையும் ஒரு ரன் அவுட்டையும் அவர் நிகழ்த்தினார். இதற்கு முன்பு ஆப்கானிஸ்தானின் முகமது ஷஸாத் 2015-ல் ஓமனுக்கு எதிராக 5 டிஸ்மிஸல்களை நிகழ்த்தியுள்ளார். அவர் 3 கேட்சுகளையும் 2 ஸ்டம்பிங்குகளையும் செய்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார்.
* சர்வதேச டி20 ஆட்டத்தில் நான்கு முறை 4+ டிஸ்மிஸல்களை நிகழ்த்தியுள்ளார் தோனி. இதர விக்கெட் கீப்பர்கள் யாரும் மூன்று தடவை கூட இதை நிகழ்த்தியதில்லை.
* சர்வதேச டி20 ஆட்டத்தில் 50 கேட்சுகளைப் பிடித்துள்ள முதல் விக்கெட் கீப்பர், தோனி. அதிக கேட்சுகள் பிடித்த வீரர் - டி வில்லியர்ஸ். அவர், 65 கேட்சுகளைப் பிடித்து ஒட்டுமொத்தமாக முதலிடத்தில் உள்ளார். இரண்டாவம் இடம் தோனிக்கு.
* அதேபோல எல்லாவிதமான டி20 ஆட்டங்களையும் சேர்த்து 150 கேட்சுகள் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்கிற பெருமையையும் தோனி அடைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.