பொறுப்புடன் விளையாடிய பாண்டியா: இந்தியா முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள்!
முதல் இன்னிங்ஸில் 104.5 ஓவர்களில் 474 ரன்கள் எடுத்துள்ளது...
பெங்களுருவில் நேற்று தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முதல் நாளன்று இந்திய அணி 6 விக்கெட்டை இழந்து 347 ரன்களைக் குவித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவன் (107), முரளி விஜய் (105) ஆகியோர் சிறப்பாக ஆடி சதமடித்தனர். ஹர்திக் பாண்டியா 10, அஸ்வின் 7 ரன்களுடன் துவக்க நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று ஆட்டம் தொடங்கியவுடன் அஸ்வின் 18 ரன்களில் அஹ்மத்ஸாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்தபிறகு ஜடேஜா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களில் மிகவும் பொறுப்புடன் விளையாடிய பாண்டியா 83 பந்துகளில் அரை சதமெடுத்தார். பிறகு அவரும் 10 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து வஃபாதார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 400 ரன்கள் தாண்டுவதற்கு பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. கடைசி விக்கெட்டுக்கு இஷாந்த் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த உமேஷ் யாதவ், வஃபாதார் வீசிய 102-வது ஓவரில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்க, இஷாந்த் சர்மா கூடுதலாக 1 பவுண்டரி அடித்து அந்த ஓவரில் மொத்தமாக 21 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். கடைசியில் இஷாந்த் சர்மா, ரஷித் கான் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ், 21 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 104.5 ஓவர்களில் 474 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் யாமின் அஹ்மத்ஸாய் 3 விக்கெடுட்டுகளும் வஃபாதார், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.