செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார் டேவிட் வார்னர்!
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் தன்னுடைய செயலுக்கு ஆஸி. வீரர் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்...
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் தன்னுடைய செயலுக்கு ஆஸி. வீரர் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் மீது ஆஸ்திரேலிய தலைமை கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, கேப்டனாக இருந்த ஸ்மித், துணை கேப்டனாக இருந்த வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. பான்கிராஃப்ட், 9 மாதங்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளார். இந்த தடையை எதிர்த்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிடம் மேல்முறையீடு செய்ய 3 வீரர்களுக்கும் ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பந்தை சேதப்படுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் நடத்திய சதி ஆலோசனைக்கு துணை கேப்டன் வார்னர் தலைமை வகித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், ஓராண்டுத் தடைக்குப் பிறகு அவர் அணிக்குத் திரும்பினாலும், அவரைக் கேப்டன் பொறுப்புக்கு பரிசீலிக்க மாட்டோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் கூறியுள்ளது.
அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய புகாரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான டேரன் லேமன் மீது தவறும் இல்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு கூறியுள்ளது. இதனால், அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அணியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிவிட்டனர்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா திரும்பியுள்ள டேவிட் வார்னர், தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இந்த விவகாரம் குறித்து அவர் கூறியதாவது: உலகளவிலான மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு: தற்போது நான் சிட்னிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். தவறுகள் நிகழ்ந்து, அதனால் கிரிக்கெட்டுக்குச் சேதம் உண்டாகியுள்ளது. என் தரப்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதோடு நடந்ததற்குப் பொறுப்பும் ஏற்றுக்கொள்கிறேன். இதனால் விளையாட்டுக்கும் அதன் ரசிகர்களுக்கும் துயரம் நேர்ந்துள்ளதை உணர்கிறேன். நான் அனைவரும், நான் சிறுவனாக இருந்ததிலிருந்து விரும்பும் விளையாட்டின் மீது கறை ஏற்பட்டுள்ளது. நான் சிறிது நேரம் இளைப்பாற வேண்டும். என் குடும்பம், நண்பர்கள், நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களுக்கு நான் நேரம் ஒதுக்க வேண்டும். சில நாள்களில் கழித்து என்னிடமிருந்து செய்தியை எதிர்பார்ப்பீர்கள் என்று கூறியுள்ளார்.